பக்கம் எண் :

262
 

7. கோபுரம்:- விஜயநகரமல்லி கார்ச்சுனனுடைய(கி.பி.1456) கல்வெட்டு இருக்கிறது.

ஏகாம்பரநாதருக்கும், நாச்சியார் காமாட்சிக்கும் தேவை காவலன், திருவணைகாவலன், வேதியர் காவலன்,வீரகஞ்சுகன், புவனேகவீரன், சமரகோலாகலன் சகாப்தம் 1391 இல் தன் பெயரால் புவனேகவீரன் சந்தியாக ஒருசந்தி பூசைக்கும், மாதம் பிறந்த நட்சத்திரத்திற்கும் விசேட பூசை நடக்கும் படிக்கு அமுதுபடி, கறியமுது, இலையமுது,அடைக்காயமுது, திருப்பரிவட்டம், சாத்துப்படி திருவிளக்கு உட்பட வேண்டும் நிவந்தங்களுக்குப் பாண்டி மண்டலத்து வீரநாரயண வளநாட்டுப் புவனேக வீரநல்லூரையும் சமரகோலாகல நல்லூரையும் விட்டுள்ளான்.

சகயாண்டு 1187 இல் திருஏகம்பமுடையார் திருமுன்பு திருநொந்தாவிளக்கு ஒன்றைச் சந்திர சூரியர் உள்ளவரை எரிப்பதற்குப் புலியூர்க்கோட்டத்து வல்லங்கிழான்பள்ளி கொண்டான் கோயிற் பிள்ளை வைத்துள்ளான்.சகயாண்டு 1172 இல் காஞ்சிபுரத்து உடையார் திருஏகம்பமுடையநாயனார்க்கு ஜயங்கொண்ட சோழ மண்டலத்துத் தாமர்க்கோட்டத்துக் களத்தூரைத் திருவிடையாட்டம் நீக்கி, ஊர் அடங்கலும் கணபதிதேவன் சந்திக்குத் திருவமுதுபடி கறியமுது உள்ளிட்ட வியஞ்சனங்களுக்கும் சாத்தியருளத் திருப்பரி வட்டங்களுக்கும் திமேற்பூச்சு கற்பூரம் பனிநீர் உள்ளிட்டவற்றிற்கும் இச்சந்தி பூசிக்கும் நம்பிமார்க்கும், திருப்பரிசாரகர்க்கும்,திருமஞ்சனம் எடுப்பார்க்கும், திருப்பள்ளித்தாமம் தொடுப்பார்க்கும் மற்றும் இச்சந்திக்கு வேண்டும் நிவந்தங்களுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது. இராஜராஜதேவர்க்குயாண்டு இரண்டாவதில் சளுக்கியநாராயணன் மனுமசித்தரசன் திருஏகம்பமுடையார்க்குத் தேவதானமாக மாற்பட மடுவில் பொன்மேந்தகம்பன் வளாகம் என்னும் பெயருள்ள ஆயிரம்குழி நிலத்தை விட்டுள்ளான். இராஜராஜதேவர்க்குயாண்டு பதினைந்தில் ஏகம்பமுடையார்க்குத் திருநுந்தாவிளக்குக்குப் பால்பசு பத்து, சினைப்பசுப் பன்னிரண்டு, வறள்பசுஆறு, கிடாரி நான்கு, ரிஷபம் ஒன்று ஆக உருக்கள் முப்பத்து மூன்று விடப்பட்டுள்ளன. மூன்றாங்குலோத்துங்க சோழனின் இருபத்தேழாம் ஆட்சியாண்டில் சயங்கொண்டசோழமண்டலத்து ஸ்ரீமத் குவளாலபுர பரமேஸ்வரன், கங்ககுலோற்பவன்,சீயகங்கன் அமரா பரணனான திருஏகம்பமுடையான் ஏகம்பமுடையார்க்கு நொந்தா விளக்கு ஒன்றினுக்கு முப்பத்திரண்டு பசுவைக் கொடுத்துள்ளான்.1


1 See the South Indian Inscriptions, Volume IV.