இவ்வூர்க் கோயிலில் மதுரைகொண்ட கோப்பரகேசரி வர்மன், முதலாம் இராஜராஜ சோழன்,முதலாம் இராஜேந்திர சோழன், முதற் குலோத்துங்கசோழன், விக்கிரம சோழன், இவர்கள் காலங்களில் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர், திருக்கருகாவூர் மகாதேவர், திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லை வனமுடையமாதேவர் என்னும் பெயர்களால் கூறப்பெற்றுள்ளனர். இக்கோயில் கல்வெட்டுக்களில்,மதுரைகொண்ட கோப்பரகேசரி வர்மரின் கல்வெட்டு, இவ்வூரை, வடகரை பாம்பூர் நாட்டுத் தேவதானம் திருக்குடமூக்கில்பால் கருகாவூர் என்றும், முதலாம் இராஜராஜ சோழனின் கல்வெட்டு நித்த விநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் என்றும் குறிப்பிடுகின்றன. குடமூக்கு என்பது கும்பகோணமாகும். அதன்பால் இக்கருகாவூர் இருப்பதாக மதுரைகொண்ட கோப்பரகேசரி வர்மன் கல்வெட்டுக் கூறவதால், அக்காலம் சிறப்புடைய ஊரைச் சொல்லி அதன் பக்கத்தில் இருக்கும் ஊரைக் குறிப்பிடுவது மரபு என்று தெரிகின்றது. "ஒரு நொந்தா விளக்கினுக்கு நந்திபுரத்து வியாபாரி சாமுண்டன் மூர்த்திகருகாவூர் நிலம் நான் விலைகொண்ட நிலம் இவ்வூர் உட்பலாற்றின் வடவாய் ஒரு முக்காணியும்" என்றும் இக்கோயிலிலுள்ள மதுரைகொண்ட கோப்பரகேசரி வர்மரின் கல்வெட்டுப் பகுதியால், அக்காலம் இவ்வூர்க்கு அருகில் ஓடிய ஆறு உட்பலாறு (உப்பனாறு?) என்னும் பெயருடன் விளங்கிற்று என்பதும் புலனாகின்றன. (இக்காலம் ஓடும் ஆறு வெட்டாறாகும்.) இக்கல்வெட்டுப் பகுதியில் குறிக்கப்பெற்ற நந்திபுரம் என்பது திருப்பட்டீச்சுரத்துக்கு அண்மையில் உள்ள இராமநாதன் கோயிலாகும். இத்திருக்கருகாவூர்க் கோயில் கல்வெட்டுக்கள் அனைத்தும் இறைவர்க்குத் திருவமுதுக்கும் திரு நுந்தாவிளக்கினுக்கும் நிலம்விட்ட செய்திகளைக் குறிப்பிடுகின்றன. இவ்வூரில் சபை ஒன்று இருந்தது. அதற்குக் கருகாவூர்ச் சபை என்று பெயர். இக்கோயில் கல்வெட்டுக்களில் காணப்பெறும் காப்புரைகள் "இது ரக்ஷித்தார் ஸ்ரீ பாதம் என்றலைமேல் இவை பன்மாஹேஸ்வரரும், பன்மாகேஸ்வரப் பெருமக்களும் ரக்ஷை". "ரக்ஷிப்பார் இவ்வூர் ஆயிரந் திருவடியுமிவர்கள் ஸ்ரீ பாதத்தூளி என்றலைமேலன" என்பனவாகும்.1
1 See the South Indian Inscriptions, Volume III, Part III,Numbers 100, 102 and 110.
|