பக்கம் எண் :

272
 

26. திருக்காளத்தி

இது சீகாளத்தி எனவும் கூறப்பெறும். சிலந்தி, பாம்பு, யானை இவை மூன்றும் வழிபட்டு வீடுபேறு அடைந்ததலம் ஆதல் பற்றி இப்பெயர் எய்திற்று என்பர்.(சீ = சிலந்தி, காளம் = பாம்பு, அத்தி = யானை) பஞ்சபூத ஸ்தலங்களுள் 1வாயுஸ்தலம். இறைவன் திருமுன்பு எரியும் பல திருவிளக்குக்களில் ஒன்று காற்றினால் மோதப்பெற்றது போல் எப்பொழுதும் அசைந்து கொண்டிருப்பதே இதற்குச் சான்றாகக் காணலாம். தென் கயிலாயத் தலங்களுள் முதன்மை பெற்றது.

இறைவர் திருப்பெயர் - (1) திருக்காளத்திநாதர்.(2) குடுமித்தேவர் - நாணன் என்னும் வேடனால், கண்ணப்பரிடம் கூறப் பெற்றபெயர். இறைவி திருப்பெயர் "ஞானப்பூங்கோதை. இப்பெயர் "ஞானபூங்கோதையாள் பாகத்தான் காண்"என அப்பர் பெருமான் திருத்தாண்டகத்தில் வருவது காண்க. பிள்ளையார் - ஐஞ்சந்திப் பிள்ளையார்.மரம் - கல்லால மரம். (விழுது இறங்காத ஆல மரமே கல்ஆலமரமாகும்) தீர்த்தம் - (1) பொன்முகலி ஆறு. இது இவ்வூரில் வடக்கு நோக்கிச் செல்லும் சிறப்புடையது. (2) பிரமதீர்த்தம் (3) சரசுவதி தீர்த்தம். (4) சூரிய தீர்த்தம்முதலியன.

திருமால், பிரமதேவர், திருமகள், கலைமகள், திக்குப்பாலகர் முதலான தேவர்களும், அகத்தியர், வசிட்டர் முதலான முனிவர்களும், முசுகுந்தச் சக்கரவர்த்தி, நக்கீரர் முதலான பெரியோர்களும், வழிபட்டுப் பேறுபெற்றதலம். அன்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கும் கண்ணப்ப நாயனார் வழிபட்டு இறைவனுடைய வலப் பக்கத்தில் நிற்கும் பெருஞ்சிறப்பு வாய்ந்தபதி. கண்ணப்பரது திருத்தொண்டைப்பற்றி "வாய்கலசமாக வழிபாடு செய்யும் வேடன் மலராகு நயனம், காய்கணையினாலிடந்து ஈசனடி கூடு காளத்தி மலையே" எனத் திருஞானசம்பந்தப் பெருமானும்,

"பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச்

செருப்புற்ற சீரடி வாய்க்கலச மூனமுதம்



1 பஞ்ச பூதஸ்தலங்கள் ஆவன:- திருவாரூர் - பிருதிவி(நிலம்). திருவானைக்கா - அப்பு (நீர்). திருவண்ணாமலை- தேயு (தீ). திருக்காளத்தி - வாயு (காற்று). சிதம்பரம்- ஆகாசம் (இடைவெளி.)

வட சென்னை இருப்புப் பாதையில் காளத்தி என்னும் தொடர்வண்டி நிலையத்திற்கு வடகிழக்கே 5. கி.மீ. தூரத்தில் இருக்கிறது. தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்று.