விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங் | கருட்பெற்று நின்றவா தோணோக்க மாடாமோ". |
என வாதவூரடிகளும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். இத்தலத்திற்குவீரை நகர் ஆனந்தக் கூத்தர் பாடிய திருக்காளத்திப்புராணம் ஒன்றும், கருணைப் பிரகாசர், சிவப்பிரகாசர்,வேலப்ப தேசிகர் இவர்கள் மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணம்ஒன்றும், சேறைக்கவிராசர் பாடிய உலா ஒன்றும்,நக்கீரதேவர் பாடிய கைலைபாதி காளத்திபாதி அந்தாதிஒன்றும் ஆக நான்கு நூல்கள் இருக்கின்றன. இவைகளன்றிஞானசம்பந்தர் பதிகங்கள் இரண்டு, திருநாவுக்கரசுநாயனார் பதிகம் ஒன்று, சுந்தரர் பதிகம் ஒன்று ஆகநான்கு பதிகங்கள் இருக்கின்றன. இவ்வூர்ப் பாடல்பெற்ற கோயிலில் சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திர சோழதேவன், முதலாம் இராஜாதிராஜ தேவன், இராசகேசரி வர்மனாகிய வீரராஜேந்திரன்,முதற்குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜாதிராஜ தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி வீரராஜேந்திர சோழ தேவன், இவர்கள் காலங்களிலும், விஜயநகர வேந்தர்களில், வீரப்பிரதாப ஹரிஹரராயர், வீரப்பிரதாப தேவராயர், வீரப்பிரதாப வீரகிருஷ்ணன் தேவராயர், வீரசதாசிவ மகாராயர் முதலானோர் காலங்களிலும், காகதீய வம்சத்துக் கணபதி காலங்களிலும், மற்றும், விஜயகண்ட கோபால தேவன், ஆளும் திருக்காளத்தித் தேவனாகிய கண்ட கோபாலன் இவர்கள் காலங்களிலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கோயில் கல்வெட்டுக்களில் இறைவர் திருக்காளத்தி உடைய நாயனார், திருக்காளத்திச் சிவனார், ஆளுடையார் தென்கயிலாய முடையார் என்னும் பெயர்களாலும், விடங்கர் சோதி விடங்கர் என்னும் பெயராலும் கூறப்பெற்றுள்ளனர். திருவிழா: திருக்காளத்தி உடையார்க்கு வைகாசியில் திருவிழா நடைபெற்று வந்தது. அவ்விழா முட்டாமல் நடைபெறுவதற்கு நரசிங்க காளத்தி தேவனான யாதவராசன் சயங்கொண்ட சோழமண்டலத்துத் திருவேங்கடக் கோட்டத்து.கருப்பற்று நாட்டு வெண்ணெய் நல்லூரைத் தட்டார் பாட்டம், தறிஇறை, வெட்டி, முட்டையாள், பட்டிக்காசு காணிக்கை, கன்மிப்பேறு, மற்றும் எப்பேர்பட்ட வரிகளும் அகப்பட தேவதானமாக விட்டிருந்தான்.
|