இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோதிவிடங்கர், எட்டாந் திருநாளில் திருவீதிக்கு எழுந்தருளி, திருச்சாந்து கற்பூர வெள்ளைச் சாத்தித் திருவுலாப்புறம் செய்து, தோசை, திருக்கண்ணமுது இவைகளை அமுது செய்தருளுவது வழக்கம். அதன் பொருட்டுப் பொலியூட்டாக நூறு பணம் அளிக்கப்பெற்றிருந்தது. இக்கோயிலில் மாசித் திருவிழாவும் மிகச் சிறப்பாய் நடைபெற்று வந்தது. அவ்விழாவின் ஏழாம் நாளில் இமையோர்கள் நாயகர் திருவீதிக்கு எழுந்தருளி, திருக்கல்யாணம் பண்ணி, திருவூடல் தீர்த்து திருக்கோயில் வாசலில் பலிபீடத்தண்டையில், திருவாலத்தில் தட்டம் எடுத்த பிறகு அத்தேவர் தோசை அமுது செய்தருளுவது உண்டு. அதன் பொருட்டும் நிவந்தம் செய்யப் பெற்றிருந்தது. திருமடம்: திருக்காளத்தி உடையார் கோயிலில் மலைமேல் ஒரு மடம் இருந்தது. அது சசிகுல சளுக்கி வீரநரசிங்க தேவன் திருக்காளத்தித் தேவனான யாதவராயனால் கட்டப்பெற்றது. அம்மடத்தில் மாகேஸ்வரருக்குச் சோறிட பெரும்பூண்டி நாட்டுப் பொன்னையன் பட்டு என்னும் ஊரின் நாற்பால் எல்லைக்கு உட்பட்ட நன்செய் புன்செய் நிலத்தை மேற்கூறப்பெற்ற வீரநரசிங்க தேவன் இராசராச தேவரின் 15ஆம் ஆண்டில் கொடுத்திருந்தான். இதுவன்றித் தியாகமேகன்மடம் ஒன்று இருந்தது. இதில் நாள் ஒன்றுக்கு முப்பது தேசாந்தரிகளுக்குச் சோறும், ஐந்து பிராமணர்களுக்கு அரிசியும் இடுவதற்கு உடலாக (மூலதனமாக) விசய கண்ட கோபால தேவரின் நான்காம் ஆண்டில் சயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழவளநாட்டுப் பேரூர் நாட்டு மதுரைவாய் திருநல்லுழான் திருநட்டப்பெருமாள் தியாகமேனன் நிவந்தம் அளித்திருந்தான். இக்கோயிலுக்கு வடக்குத் திருவீதியில் கூற்றுதைத்தான் சோமதேவர் மடம் என்று ஒன்று இருந்தது. திருநந்தவனம்: திருக்காளத்தி உடைய நாயனாரின் திருமலை அடிவாரத்தில் வீரநரசிங்க தேவன் திருநந்தவனம் என்னும் பெயருள்ள நந்தவனம் இருந்தது. அது சசிகுலசளுக்கி வீரநரசிங்க தேவனான யாதவராயனால் ஏற்படுத்தப்பட்டது. அதன் பொருட்டு வீரநரசிங்க தேவன் ஆற்றூர்
|