நாட்டுக்கோன்பாக்கத்திலும், திருக்காளத்திப் புத்தூரிலும் நெல்வாயிலிலும், தனக்குக் கிடைக்கும் நன்செய் நிலத்தில் பத்தில் ஒன்றாய் வந்த பாடிகாவல் கடமை, பொன் ஆயம், நெல்லாயம் இவைகளை உடலாக விட்டிருந்தான். ஆலால சுந்தர நந்தவனம் என்று ஒன்று இருந்ததை முதற்குலோத்துங்க சோழனின் 49-ஆம் ஆண்டுக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. ஒரு கமுகம் தோட்டத்திற்கு கண்ணப்ப தேவர் பெயர் வைக்கப்பெற்றிருந்தது. நூற்றுக்கால் மண்டபமும், பெரியகோபுரமும்: இக்கோயிலிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்தையும், பெரிய கோபுரத்தையும் கட்டியவர் விஜயநகர வேந்தனாகிய வீரப்பிரதாப கிருஷ்ணதேவராயர் ஆவர். இதை இக்கோயிலில் சகம் 1438 - இல் செதுக்கப்பட்ட தெலுங்குக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. கண்ணப்பர் கோயில்: இக்கோயில் மண்டபமும் மண்டபத்தைச் சுற்றிய தாழ் வாரமும் ஆடவல்லான் கங்கை கொண்டானாகிய இருங்கோளன் தாயாராகிய புத்தங்கையாரால் கட்டப்பெற்றது. இவ்வூரிலுள்ள வேறு கோயில்: இவ்வூரில் திருமணிக்கெங்கையுடைய வேறு கோயில் ஒன்று உண்டு. திரிபுவனச் சக்கரவர்த்தி வீரராஜேந்திர சோழதேவரின் பதினொன்றாம் ஆண்டில்,சயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்து வல்லம் நாட்டுப் பெருந்தண்டலத்துக்கோறுழான அமுதாழ்வான் மங்கை நாயகன் மழவராயனால் அக்கற்றளியும், திருமண்டபமும்,சோபானமும் கட்டப்பெற்றதாகும். இக்கோயிலில் தனி இடத்தில் சசிகுலசளுக்கி தனிநின்று வென்றானாகிய வீரநரசிம்ம தேவனாகியயாதவராசன் மல்லிகார்ச்சுனரை எழுந்தருளுவித்திருந்தான். இவ்வூரைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு: இவ்வூர் சயங்கொண்ட சோழமண்டலத்து,திருவேங்கடக் கோட்டத்து, ஆற்றூர் நாட்டுத் திருக்காளத்திஎன இக்கோயில் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளது. திருக்காளத்தி முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் காளத்தியாகிய மும்முடிச் சோழபுரம் என்றும் வழங்கப்பெற்றிருந்தது.
|