பிறசெய்திகள்: முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் இக்கோயிலில் கிருத்திகைத்தீப விழாவைப்பற்றிக் கூறப்பெற்றுள்ளது. அதற்குக் கங்கைக்கொண்ட சோழ மிலாடுடையான் நிவந்தம் அளித்திருந்தான். கண்ணப்பர் பிறந்த நாடு பொத்தப்பிநாடு என்று சேக்கிழார் கூறியுள்ளார். அப்பொத்தப்பி நாடு இவ்வூர்க் கல்வெட்டிலும் குறிக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் நாட்டுத் தொகையில் புரிசை நாட்டுப்புரிசை எனக் குறிப்பிட்டுள்ளார்.அப்புரிசை நாடு மணவில் கோட்டத்தில் உள்ளது என்பதையும் இக்கோயில் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. அளவு கருவிக்குக் காளத்தியுடையான் மரக்கால் என்றும், ஒரு தலைவனுக்குத் திருக்காளத்திதேவன் என்றும், திருவிளக்குக் குடிகளில் ஒருவனுக்குமன்றாடி காரிசாத்தன் திருக்காளத்தி கோன் என்றும் பெயர்கள் வைக்கப்பெற்றிருந்தன. மூன்றாம் பிராகாரத்தில் உள்ள மண்டபம் சின்னையா மண்டபம் எனப் பெயர் பெற்றுள்ளது. திருநுந்தாவிளக்குகளுக்கும், திருமந்திர போனக புறத்திற்கும் நிபந்தங்கள் மிகுதியாக அளிக்கப்பெற்றுள்ளன. ஒரு நுந்தா விளக்கினுக்கு விடப்பெறும்சாவா மூவாப்பசு 32-ஆகும். ஆடு ஆயின் 96 ஆகும். 96-ஆடுவிடுபவர் பொலிகிடா இரண்டும், பொலி மொத்தை இரண்டும் விடுவது வழக்கம். நுந்தா விளக்கேயன்றி சந்திவிளக்கும் வைப்பதுண்டு. ஒரு சந்தி விளக்குக்கு ஐந்து நற்பழங்காசு அளிப்பதுண்டு. 32 - பசுமாடு விடுபவர் ரிஷபம் ஒன்றையும் விடுவர்1.
1 See the Annual Reports on South Indian Epigraply for the year 1892 Numbers 195-202, year 1892 Numbers 72-76. Numbers 166-203, year 1904 Numbers276-303, year 1922 Numbers 82-184, year 1924 Numbers 150-180. See also the South Indian Inscriptions, Volumes IV Numbers 643-650.Volumes VIII Numbers 377-381. Volumes VIII Numbers 463-502.
|