பக்கம் எண் :

282
 

கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ளது. இரண்டாம்ஆதித்த கரிகாலனின் 3ஆம் ஆண்டுக் கல்வெட்டு, இக்குடமூக்கை, குடந்தை என்னும் மரூஉ மொழியால் குறிப்பிட்டுள்ளது. இக்குடமூக்கு பழங்காலத்தில் பாம்பூர் நாட்டிற்கு உட்பட்டிருந்தது. பின் முதலாம் இராஜராஜன் காலத்தில் உய்யக்கொண்டார் வளநாட்டுக்கு உட்பட்டதாயிற்று.

29. திருக்கொட்டையூர்க்கோடீச்சுரம்

'நாடெல்லாம் நீர் நாடு தனையொவ்வா நலமெல் லாம்' என்று சேக்கிழார் சுவாமிகளாற் சிறப்பிக்கப்பெற்ற சோழ வளநாட்டிலுள்ள சிவ தலங்கள் பலவற்றிற் சிறந்ததொன்றாம் மட்டறு நலமிகு கொட்டையூர் என்பது.

இத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு வடமேற்கே ஒன்றரை கி.மீ. தூரத்தில் காவிரியாற்றின் வடகரையில் அமைந்துள்ளது.

வேறுபெயர்கள்: இத்தலத்திற்கு வில்வாரண்யம், ஏரண்ட புரம் என்னும் வேறு பெயர்களும் உள. எனினும் கொட்டையூர் என்ற பெயரே தேவாரத்திலும் கல்வெட்டுக்களிலும் ஆளப்பட்டுள்ளது.

திருக்கோயில்:

சிவதலங்கள் சிலவற்றிற்கு ஊரின்பெயரும்,திருக்கோயிலின் பெயரும் வேறு வேறாக அமைந்துள்ளன. எடுத்துக் காட்டாகத் திருவாரூர்ப் பூங்கோயில்,சாந்தை அயவந்தி, செங் காட்டங்குடிக் கணபதீச்சரமென்பன. இம்முறையில் இவ்வூர்த் திருக்கோயிலுக்குக் கோடீச்சுரம் என்பது பெயர்.

கோடீச்சுரப் பெயர்க் காரணம்: பத்திரயோகி முனிவருக்கு இக்கொட்டையூர்க்கோமான் கோடிவிநாயகர், கோடி அம்மையார், கோடிமுருகர்,கோடிசண்டேசுவரர்களோடு தாமும் கோடித் திருவுருவம்கொண்டு காட்சியருளினர். இதனால் இவ்வூர் இறைவர்க்குக் கோடீச்சுரன் எனப் பெயராயிற்று. இங்ஙனம் கோடீச்சுரன் உறைவது கோடீச்சுரமாயிற்று. இன்னும் சிவலிங்கப் பெருமான் திருவுருவம் பலாக்காய்போன்று முள்முள்ளாகத் திருமேனியெங்கும் உடைமை நேரிற் கண்டறியத்தகும். ஒவ்வொரு முள்ளும் ஒவ்வொரு சிவலிங்கமாகும்.கோடிவிநாயகர் திருமேனியிலும் பல விநாயக வடிவங்கள் காணப்படும்.