மூர்த்திகள்: கோயிலில் மூலஸ்தானத்துள்ள சிவலிங்கத்திற்குக் கோடீச்சுரர் என்பது பெயர்.அம்மையார் பந்தாடு நாயகி. இத்திருப்பெயர் அப்பர் பெருமானால் இவ்வூர்ப் பதிகத்தில் 'பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்' - என எடுத்து ஆளப்பட்டிருப்பது பெருமகிழ்வு தருவதாய் உள்ளது. தீர்த்தங்கள்: காவிரியாறு, அமுதக்கிணறு (அ) கோடி தீர்த்தம் என்பவை. அமுதக்கிணறு கோயிலின் முதலாம் திருச் சுற்றாலையில் உள்ளது. தல விருட்சம்: கொட்டைச் செடி. திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஐந்து மூர்த்திகளையும் காண்போர், வேறு தலங்களில் கோடித் திருவுருவம் கண்ட பயனடைவர். இங்குச் செய்த எப்புண்ணியமும் பிற தலங்களிற் செய்த புண்ணியங்களினும் கோடி மடங்கு பயன் தருமென்றும், இத்தலத்திற் செய்த பாவமும் அப்படியே கோடி மடங்காகிக் கழுவாய் இலதாமென்றும் பெரியோர் கூறுவர். 'கொட்டை யூரிற் செய்த பாவம் கொட்டையோடே' என்ற பழமொழியும் இத் தலத்தின் சிறப்பை உணர்த்தும். தலத்தைப்பற்றிய நூல்கள்: கொட்டையூர்,திருவலஞ்சுழி என்ற இரண்டு தலங்களையும் இணைத்துத் திருநாவுக்கரசர் தேவாரம் பாடியுள்ளார். இத்தலத்திற்கு அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்ப் பாட்டும்உண்டு. இத்தலத்துப் பிறந்து வளர்ந்த சிறந்த புலவரான சிவக் கொழுந்து தேசிகர் கோடீச்சுரக்கோவை ஒன்று பாடியுள்ளார். அது டாக்டர். உ.வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. சிவக் கொழுந்து தேசிகர் இயற்றிய உலா ஒன்றும் இத்தலத்திற்கு உளது என்பர்.அது இதுபொழுது கிடைப்பது அரிதாய் இருக்கிறது. இத்தலமான்மியம்உரைநடையில் அச்சில் வெளிவந்துள்ளது. கல்வெட்டு: இக்கோயிலில் இரண்டாம் இராஜாதிராஜ சோழன் (கி. பி. 1163 - 1178) காலத்தது ஒன்றும்,இவனுக்குப் பின் பட்டம் எய்திய மூன்றாங் குலோத்துங்கன்(கி. பி. 1178 - 1216) காலத்தவை மூன்றுமாக நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளன்றி அம்மன் கோயிலில் ஒரு கல்வெட்டும் உண்டு.
|