பக்கம் எண் :

284
 

இரண்டாம் இராஜாதிராஜன் கல்வெட்டு:இஃது அர்த்த மண்டபத்துத் தென்புறச் சுவரின் அடித்தளத்தில் இருக்கிறது. இது இம்மன்னன் அரியணை ஏறிய மூன்றாம் ஆண்டு அதாவது கி. பி. 1166 இல் பொறிக்கப்பெற்றது. இன்னம்பர் நாட்டு ஏர் என்னும் ஊரிலிருந்து அரையன்பொற்சோழன் மனைவியாகிய அருமொழி நங்கையார் இக்கொட்டையூர்க் கோடீச்சுரமுடையார் கோயிலில் புராணலிங்க தேவரை எழுந்தருளுவித்து அவர்க்கு அமுதுபடி உள்ளிட்டவைகளுக்கு நிவந்தம் அளித்துள்ள செய்தியை உணர்த்துகின்றது.

மூன்றாங் குலோத்துங்கன் கல்வெட்டு1: இது மகாமண்டபத்தின் வடபுறச் சுவரில் இருக்கிறது. இஃது இம்மன்னன் அரியணை ஏறிய 32 ஆம் ஆண்டில்(கி. பி. 1210) பொறிக்கப்பெற்றது. திருக்கோடீச்சுரமுடையார்க்கு மங்கலவன் பெரியதேவன், நச்சினார்க்கினியன் முதலான சிலர் ஒரு பித்தளைக் குத்துவிளக்குக் கொடுத்ததை இக்கல்வெட்டு உணர்த்துகின்றது.

மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு11: இதுவும் மகா மண்டபத்தின் வடபுறச் சுவரிலுள்ளது. இது இம்மன்னன் அரியணை ஏறிய 27 ஆம் ஆண்டில்(கி. பி. 1205) செதுக்கப்பட்டது. இக்கோயில் திருமடைவிளாகத்து இருந்த பொன்னாரம்புடையான் அபயம் புக்கானின் மனைவியாகிய உதயஞ்செயல் என்னும் அம்மையார் திருக்கோடீச்சுரருக்குக் கோவை திருவிலைத்தட்டு, ஊதுசங்கு, வட்டில், பஸ்மதளிகை இவைகளைக் கொடுத்துள்ளார் என்ற செய்தியைப் புலப்படுத்துகின்றது.

மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு111: இது முதற் கோபுரத்தின் தென்பால் கீழ்புறச்சுவரில் இரண்டு துண்டுக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இது இம்மன்னன் அரியணை ஏறிய 36 ஆம் ஆண்டில் (கி.பி. 1214) தீட்டப்பட்டது. இது திருப்புகலூரில் இருந்த மும்மேலிரனதாள நாயகன் திருநந்தவனத்திற்கு உடலாகப் பொருள் வைத்துள்ளான் என்று எண்ணக்கூடிய குறிப்புக்கள் அடங்கியதாய் உள்ளது.


1 See the Annual Reports on South Indian Epigraphy for the year 1927.No.214-244.