பக்கம் எண் :

285
 

அம்மன்கோயிற்கல்வெட்டு: 'சுவஸ்திஸ்ரீ எழுபத்தொம்பது வளநாடும், நகரமும் பதினொண்ணே விஷையத்தாரும் தன்மம்' என்பதாகும். இதனால் பலரிடத்தும் பொருளீட்டி இத்திருக்காமக் கோட்டம் எடுப்பிக்கப் பெற்றது என்பதை அறியலாம்.

கொட்டையூர் வேங்கடாசலம்பிள்ளையின் கல்வெட்டு: இது முதல் கோபுர வாசலடியில் இருக்கின்றது. கலியுகாதி 5014 தமிழ் பரிதாபி தை 4 இல் செதுக்கப்பட்டது. கோடீச்சுரப் பெருமானுக்கு,காலைசந்திக் கட்டளை, சோமவாரக் கட்டளை, சிவராத்திரிக்கட்டளை இவைகளுக்காக மேலைக்காவேரியில் 3 ஏக்கர் 85 சென்ட் நன்செய் நிலம் விட்டிருப்பதை அறிவிப்பதாகும்.

இவ்வூரைத் தன்னகத்துக்கொண்ட நாடு:

இன்னம்பர் நாட்டுப் பிரமதேயம் என்று கொட்டையூர் கூறப்படுகிறது. இவ் வின்னம்பர் நாட்டை உள்ளடக்கிய வளநாடு முதலாம் இராஜராஜன் காலத்தில் இராஜேந்திரசிங்க வளநாடு என்றும், முதற்குலோத்துங்கன் காலத்தில் இதன் மேலைப்பகுதி உலகுய்யவந்த சோழ வளநாடு என்றும், விக்கிரமசோழன் காலத்தில் விக்கிர சோழ வளநாடு என்றும் வழங்கப் பெற்றிருந்தது. இவ்விக்கிரம சோழ வளநாடு என்ற பெயரே இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாங் குலோத்துங்கன் இவர்கள் காலத்திலும் நின்று நிலவுவதாயிற்று. இக்கொட்டையூர்க்கு வடக்கே சுமார் மூன்று கி.மீ. தூரத்தில் இருக்கும் ஏர் என்னும் வைப்புத்தலத்தின் பெயர் இக்கல்வெட்டில் காணப்படுகிறது. இந்த ஏர் என்னும் ஊர்க்கு குலோத்துங்கசோழ வானவன் மங்கலம் என்ற வேறு பெயர் உண்மையையும் அறியலாம். இக்காலம் இவ்வூர் ஏரகரம் என்று வழங்கப்பெறுகின்றது.

30. திருக்கோகரணம்

இராவணன் இலங்கையில் எழுந்தருளுவித்தற் பொருட்டு இலிங்கம் ஒன்றை இறைவனிடம் பெற்றுச் செல்கையில்,தேவர்களின் வேண்டுகோளின்படி ஓர் உபாயத்தால் பிள்ளையார், அதை அவனிடமிருந்து வாங்கி, இப்பதியில் எழுந்தருளுவித்தார். இராவணன் தன்னால் கூடிய வரையில் அந்த இலிங்கத்தைப் பெயர்த்தெடுக்க முயன்று இழுத்தபொழுது அது பசுவின்காதுபோல் குழைந்தமையால் இப்பெயர் பெற்றது என்பர்.

இது கர்நாடக மாநிலத்தில் வடகன்னடம் மாவட்டத்தில் உள்ளது.