கோமுத்தரையர் காலத்துக் கல்வெட்டும், பாண்டியர்களில் மாறன் சடையன் காலத்துக் கல்வெட்டும், சோழ மன்னர்களில் மதுரை கொண்ட கோப்பர கேசரிவர்மன் முதலாம் இராஜராஜசோழன் முதற் குலோத்துங்கன் விக்கிரம சோழன் மூன்றாம் குலோத்துங்கன் என்பவர்களுடைய கல்வெட்டுக்களும் ஆக ஐம்பது கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இத்திருக்கோயில், கோயில் திருவிசைப்பாப்பதிகம்பாடிய கண்டராதித்த சோழதேவரது மனைவியாராகிய செம்பியன்மாதேவியாரால் கற்றளியாக ஆக்கப்பெற்ற பெருஞ்சிறப்புடையது. இவ்வம்மையார் இக்கோயிலைக் கட்டுவதற்கு முன்பு இங்கிருந்த இருபத்தாறு கல்வெட்டுக்களைப் பெரிதும் பாதுகாத்து அவைகளையெல்லாம் தாம் கட்டியகோயிலில் செதுக்கி வைக்கச் செய்தனர். கல்வெட்டில் இவ்வம்மையார் வைத்திருந்த பற்று பாராட்டற்குரியது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருக்கோடி காவல் பெருமான். திருக்கோடிகாவில் மகாதேவர். திருக்கோடிகாவுடையார் என்னும் பெயர்களால் கூறப்பெற்றுள்ளனர். இக்கோயில் திருச்சுற்றுமாளிகை விக்கிரம சோழதேவரால் கட்டப்பெற்றதாகும். அதில் விக்கிரமசோழன் திருமாளிகை என எழுதப்பெற்றுள்ளது.சண்டேசுவரநாயனார் கோயில் உத்தரத்தில் தியாகசமுத்திரம் என்று செதுக்கப்பெற்றுள்ளது. அதனால் அக்கோயில் தியாக சமுத்திரம் என்னும் சிறப்புப் பெயருடைய சோழமன்னனால் கட்டப்பெற்றது என்று அறியக் கிடக்கின்றது. இத்திருக்கோயில் திருப்பெருந்துறை ஆளுடையாரைக் கோப்பெருஞ்சிங்க தேவரை எழுந்தருளுவித்தவர் கங்கைகொண்ட சோழபுரத்துமணவூருடையார் வரந்தரும் கூத்தப் பெருமாள் ஆவார். இவ்வூர் முதலாம் இராஜராஜன் காலத்தில்(ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டு) வடகரை நல்லாற்றூர் நாட்டுத் திருக்கோடிகாவல் எனவும்,கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் விருதராசபயங்கர வளநாட்டு நல்லாற்றூர்நாட்டுத் திருக்கோடிகாஎனவும் கூறப்பெற்றுள்ளது. நந்திபோத்தரையர் என்னும்முற்காலப் பல்லவர் கல்வெட்டினால் இக்கோயிலினுள் சிறுநங்கை ஈச்சரம் என்னும் பெயருள்ள கோயில் ஒன்று கூறப்பெற்றுள்ளது. திருக்கோடிகாவிற்குக் கண்ணமங்கலம் என்னும் வேறுபெயருண்மையை 'திருக்கோடிகாவாகிய கண்ணமங்கலத்து' என்னும் கல்வெட்டுப் பகுதி அறிவிக்கின்றது.
|