கோயிலில் பத்து தபசிகள் உண்பதற்கு ஒருவேலியும், வைத்திய விருத்திக்காக அரை வேலியும் திருக்கோடிகாவில் கொடுக்கப் பெற்றிருந்தது. அமாவாசையில் இறைவரை எழுந்தருளச் செய்வதற்கு விக்கிரமசோழதேவரின் நான்காம் ஆண்டில் நிவந்தம் கொடுக்கப் பெற்றுள்ளது. வரகுணமகாராஜபாண்டியன் சரஸ்வதி, கணபதி இவர்கள் கோயில்களில் விளக்கு எரிக்க நிபந்தம் அளித்துள்ளான். கோபுரத்தின்வாசல் இடதுபக்கத்தில் புதுவைபுரி பிள்ளைப் பெருமாள் மகனார் சடையரைப்பற்றிய பாடல்கள் இருக்கின்றன1. 32. திருச்2சாய்க்காடு ஆதிசேடனது நாகமணி ஒளி வீசியதால் இப்பெயர் பெற்றதுஎன்பர். இவ்வொளிக்குச் சாய் ஒளி என்பர். இதுசாயாவனம் எனவும் வழங்கப்பெறும். இது சீகாழிக்குத் தென்கிழக்கே 11.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்பதாவது ஆகும். சீகாழி, மயிலாடுதுறை ஆகிய நகரங்களிலிருந்து பூம்புகார் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். இறைவரது திருப்பெயர்:- அமுதேசுவரர்,சாயாவனேசுவரர். இறைவியாரது திருப்பெயர்:- குயிலினும் நன்மொழியம்மை. தீர்த்தம் காவிரி, ஐராவததீர்த்தம். இதுகோயிலுக்கு எதிரில் இருக்கின்றது.
1 See the Annual Report on South Indian Epigraphy for the year 1931. Inscription numbers 9-58. Also see the South Indian Inscriptions, Vol.13,Inscription general numbers 55, 74, 78, 136, 222. 2. சாய் என்பதற்குத் தமிழில் கோரை என்றுபொருள். கோரைக் காடு செறிந்த இப்பகுதி சாய்க்காடு என்று பெயர் பெற்றது. சாய் என்னும்வழக்கு, கோரை என்ற பொருளில் பழந் தமிழ் நூல்களில்உள்ளது. "அயத்து வளர் பசாய்" என்பது காண்க.
|