உபமன்னியு முனிவர் பூசித்துப் பேறுபெற்றனர். இந்திரனது தாயார் நாளும்வந்து இத்தலத்தைப் பூசித்துவந்தனர்.அவரது கஷ்டத்தைப் போக்க, இந்திரன் சிவலிங்கத் திருமேனியைத் தேவ உலகிற்குக் கொண்டுபோக எண்ணித் தோண்டிப் பார்த்தான். பாதாள லோகம்வரை அவருடைய திருமேனி சென்றிருந்தமையால் அவரை மீளவும் அங்கேயே எழுந்தருளச் செய்வித்தான் என்பர். இதற்குச் சம்பந்தர் பதிகங்கள் இரண்டு அப்பர் பதிகங்கள் இரண்டு ஆக நான்கு இருக்கின்றன. இத்தலத்தை ஐயடிகள் காடவர்கோன்நாயனார் பாடியுள்ளனர். அப்பாடல் பின்வருமாறு:- அஞ்சனஞ்சேர் கண்ணார்அருவருக்கும் அப்பமதாய்க் | குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் - நெஞ்சமே | போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச் | சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து. |
கல்வெட்டு: இங்கே 13 கல்வெட்டுக்கள்படி எடுக்கப்பட்டன. அவைகளில் 10 சோழர்களுடையன. 3 பாண்டியர்களுடையன. சோழர் எழுத்துக்கள் பிற்காலச் சோழர்களுடையவைதான். நாடு: இராஜாதிராஜ வளநாடு நாங்கூர்நாடு. ஊர்: காவிரிப்பூம் பட்டினத்துத் திருச்சாய்க்காடு என்பது. குலோத்துங்கன்IIIகாலத்தில் சேகரித்த நெல் வழி பாட்டிற்கும், பழுதுபார்ப்பதற்கும் பயனாயிற்று. மற்ற நாயக்கர்கள் விளக்குக்காக நிலதானம், கோயிலுக்கு மிளகு தருவதற்கு நிலக் குத்தகை, அந்தணர்க்கு அமுது அளிக்க நிலதானம், 50 பிராமணர் களுக்கு உணவளிக்க நிலம் அவர்களுக்கு இருக்க மடம் கட்டியது முதலியன. வரிகொடாதநிலத்தார் கோயிலுக்கு நிலத்தைக் கொடுக்கும் படி ஆணையிடப்பட்டார்கள். குணாகரன் கோயிலுக்கு நிலதானம் செய்த செய்தி ஒரு செய்யுளால் கூறப்பட்டுள்ளது. மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு ஒன்று நிலதானம் கூறுகிறது. சகம் 1679 (கி.பி.1757) கல்வெட்டு ஒன்றில் இராயராவுத்தபிண்டன் என்பவன் வழிபாடு, விழாக்கள், பழுதுபார்த்தல் இவைகளுக்காகப் பூதானம் செய்தான்.
|