பக்கம் எண் :

292
 

தந்தையும் தாயும் பிடிக்கச் சோமவார சிவராத்திரியில் அறுத்து அபிஷேகிக்க, அம்பாள் வெளிப்பட்டு, அந்தக்குழந்தைக்குஅநுக்கிரகித்தார் என்பது செவிவழிச்செய்தியான வரலாறு. வெள்ளைப்பன்றியாகி திருமால் வழிபாடு செய்ததலம். சுவாமிபெயர் சிவபுரநாதர். அம்மை பெயர் சிங்காரவல்லி. தீர்த்தம் சந்திரபுஷ்கரணி. கார்த்திகைச் சோம வாரங்களில் தீர்த்த விசேஷம். கடைசிச் சோமவாரத்தில் உற்சவம். அரசியலார் 1927ல் படியெடுத்த 272 முதல் 282 எண் உள்ள 10 கல்வெட்டுக்கள் உள்ளன.

34. திருச்செங்காட்டங்குடி

கயமுகாசுரனை விநாயகக்கடவுள் கொன்றபொழுது இரத்தம் வெள்ளமாகப் பெருகி ஓடிய காரணத்தால் செங்காடு என்னும் பெயர் பெற்றது. இச்செய்தி,

"ஏடவிழ் அலங்கல் திண்தோள்

இபமுகத் தவுணன் மார்பில்

நீடிய குருதிச் செந்நீர்

நீத்தமாய் ஒழுகும் வேலைப்

பாடுற வருங்கான் ஒன்றிற்

பரத்தலின் அதுவே செய்ய

காடெனப் பெயர் பெற்று இன்னும்

காண்டக இருந்த தம்மா."

என்னும் கந்தபுராணம், கயமுகன் உற்பத்திப்படலத்திலுள்ள செய்யுளால் அறியப்படுகின்றது.

ஊரின் பெயர் செங்காட்டங்குடி ஆயினும் அங்குள்ள கோயிலுக்குக் கணபதீச்சரம் என்று பெயர். கயமுகாசுரனைக் கொன்ற பாவம் நீங்கும் பொருட்டுக்கணபதி சிவலிங்கம் ஒன்றைத் தாபித்து பூசித்தமையின் இப்பெயர் எய்திற்று. இந்நிகழ்ச்சியைக் "கரிமுகத் தவுணற்காயந்து கரிமுகத் தண்ணல் பூசைபுரி சிவநகரமீது" என்னும் திருவிளையாடற் புராண அருச்சனைப்படலத்து அடிகளாலும் அறியலாம்.

நன்னிலம் தொடர் வண்டி நிலையத்திற்குக் கிழக்கே 6 கி.மீ. தூரத்திலுள்ள திருப்புகலூர்க்குச் சென்று, அங்கிருந்து தெற்கிலுள்ள முடிகொண்டான் ஆற்றைக்கடந்து, திருக்கண்ணபுரத்தை அடைந்து