பக்கம் எண் :

294
 

வர்மனாகிய இராஜராஜதேவன் I இராஜகேசரிவர்மராகிய உடையார் ஸ்ரீ இராஜாதிராஜதேவன்I, திரிபுவனச்சக்கரவர்த்தி இராஜராஜதேவர் II, பரகேசரிவர்மராகிய திரிபுவனச்சக்ரவர்த்தி குலோத்துங்க சோழதேவர்III, இராஜராஜசோழன்III,பரகேசரிவர்மனாகிய திரிபுவனச்சக்கரவர்த்தி இராஜேந்திர சோழ தேவன் இவர்கள் காலங்களிலும்;விசயநகர வேந்தர்களில் வீரவிருப்பண்ண உடையார்,வீரபூபதியார், வீரப்பண்ண உடையார், இவர்கள் காலங்களிலும்;கோனேரிதேவமகாராசர் காலத்திலும் வெட்டப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர் கணபதீச்சரமுடைய நாயனார், கணபதீச்சரமுடைய மகாதேவர் என்னும் பெயர்களாலும், பிக்ஷாடனர் (ஓடேந்திச்செல்வர்) உத்திராபதிநாயகர் என்னும் பெயராலும் குறிக்கப்பெற்றுள்ளனர்.

இவ்வூர் முதலாம் இராஜராஜசோழனின் பத்தொன்பதாம் ஆண்டுக் கல்வெட்டில் மும்முடிச்சோழவளநாட்டு மருகல்நாட்டுச் செங்காட்டங்குடி என்றும், முதலாம் இராஜாதிராஜனின் முப்பத்தி இரண்டாம் ஆண்டுக் கல்வெட்டில் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டு மருகல்நாட்டுச் செங்காட்டங்குடி என்றும் மூன்றாங்குலோத்துங்கசோழன் கல்வெட்டிலும் வீரவிருப்பண்ண உடையார் கல்வெட்டிலும் செயமாணிக்கவளநாட்டு மருகல்நாட்டு திருச்செங்காட்டங்குடி என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.

திருவிழா:

இக்கோயிலில் சித்திரைமாதப் பரணியில் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அன்று உத்திராபதியார் சிறுத் தொண்ட நம்பிக்கு முத்தியளிக்கும் பொருட்டு, திருமுத்துவநெறி மண்டபத்திற்கு எழுந்தருளுவது வழக்கம். அதன்பொருட்டு மூன்றாம் இராசராசசோழனின் இருபத்துநான்காம் ஆண்டில் அரசூருடையான் திருச்சிற்றம்பலம் உடையானான திருச்சிற்றம்பலப் பல்லவராயன் நில நிவந்தம் அளித்திருந்தான். சித்திரைத் திருவாதிரையிலும் இக்கோயிலில் திருவிழா நடந்து வந்தது. அன்று சீராளதேவரை சிறுத் தொண்டநம்பி மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்வதுண்டு. அன்று விழாவிற்கு எழுந்தருளும் அடியார்களுக்கு உணவு அளிக்கும் பொருட்டு முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் நில நிவந்தம் செய்யப்பெற்றிருந்தது.