திருப்பணிகள்: இத்திருக்கோயிலின் மூன்றாம் திருச்சுற்றையும்(பிராகாரத்தையும்) அதனைச் சூழ்ந்த திருமடவிளாகத்தையும் கட்டுவதற்கு மூன்றாங் குலோத்துங்கசோழதேவர் காலத்தில் நிலம் வாங்கப் பெற்றது. வாதாபிகணபதி கோயிலைக்கட்டியவன் புதுவூர் வட்ட வார்சடையன் இராசசூரியபல்லவரையனாவன். சீராளதேவ பிள்ளையாரை செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டதேவர் மண்டபத்திலிருந்து திருமருகலுக்கு எழுந்தருளச் செய்வதற்கு மூன்றாம் குலோத்துங்கசோழதேவர் காலத்தில் ஒரு பெருவழி ஏற்படுத்தப் பெற்றது. திருமடம்: இவ்வூரில் சீராளன் சிறுத்தொண்டன்மடம் என்னும் பெயருள்ள மடம் ஒன்று இருந்தது. இச்செய்தி பராக்கிரமபாண்டிய தேவரின் ஏழாம் ஆண்டுக் கல்வெட்டில் கூறப்பெற்றுள்ளது. 1 35. திருச்சோற்றுத்துறை சோழநாட்டுக் காவிரித்தென்கரைத்தலம். தஞ்சாவூர் - கண்டியூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது. அருளாளர் என்னும் அந்தண அன்பருக்கு அட்சயபாத்திரம் அளித்துப் பஞ்சகாலத்தில் அடியார்களுக்கு அன்னமிட்டுக் காத்த தலம். கௌதம முனிவர் தவஞ்செய்து முத்திபெற்றமையால் கௌத மாஸ்ரமம் என்று வழங்கப்படும். இந்திரன், சூரியன் முதலியோர்கள் வழிபட்டு உய்ந்தனர். சூரியன் வழிபட்ட செய்தியை "செங்கதிரோன் வணங்கும் திருச்சோற்றுத்துறைநாதன்" என்னும் நேரிசையால்அறியலாம். திருவையாற்று சப்தஸ்தான ஸ்தலங்களில் ஒன்று. இறைவன் பெயர் தொலையாச் செல்வர். இறைவியின் பெயர் ஒப்பிலாம்பிகை. வடமொழியில் முறையே ஓதவனேசுவரர், அன்னபூரணி எனவும் வழங்கப் பெறும்.
1 See the Annual Reports on South Indian Epigraphy for the year 1913, No.51-82.
|