பக்கம் எண் :

297
 

பெருமாள் கோயில் தொடர்வண்டி நிலையத்திற்குத் தெற்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரிக்குத் தென்கரையிலுள்ள இருபதாவது தலமாகும்.

இறைவர் திருப்பெயர் கல்யாணசுந்தரேசுவரர். இறைவி திருப்பெயர் கல்யாணசுந்தரி.

தீர்த்தம் சப்தசாகரதீர்த்தம். இது கோயிலுக்கு எதிரில் உள்ளது.

திருச்சத்தி முற்றத்தில் எழுந்தருளியிருக்கும் சிவக்கொழுந்தை அப்பர்பெருமான் வழிபட்டு, அவரது திருவடியைத் தன் தலைமேல் வைத்தருள வேண்டுமென்று வேண்ட, அவர் "நல்லூருக்கு வா ஆங்கே நின் நினைப்பதனை முடிக்கின்றோம்" என்று கூறியருள அவ்வாறே அப்பர்பெருமான் அங்குவர, நல்லூர்ப்பெருமான் தன் திருவடியை அப்பர் தலைமேல் வைத்துத் திருவடி தீட்சைசெய்த பதியாகும் இது.

இச்செய்தி, "நல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார் நல்லூரெம்பெருமானார் நல்லவாறே" (திருத்தாண்டகம் திருப்பாடல்4) என்னும் தேவாரப் பகுதியால் அறியலாகும்.

சிவனடியார்களுக்குக் கந்தை, கீளுடை கோவணம் இவைகளைக் கருத்தறிந்து உதவிவந்த அமர்நீதி நாயனார்க்கும் அவரது குடும்பத்தார்க்கும் முத்தியளித்த தலம். இச்செய்தியைத் திருநாவுக்கரசுநாயனார், இவ்வூர்த் திருவிருத்தம் ஏழாம் திருப்பாட்டில்,

"நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்தநல் லூரகத்தே

கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடந்தான்

வாட்கொண்ட நோக்கி மனைவியொடு மங்கோர் வாணிகனை

ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோவிவ் வகலிடமே"

எனச் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

அகத்திய முனிவருக்குக் கல்யாணக்கோலத்தை இப்பதியில் சிவபெருமான் காட்டியருளினார். இவ்வூர்க்கு ஞானசம்பந்தர் பதிகங்கள் மூன்று, திருநாவுக்கரசுநாயனார் பதிகங்கள் இரண்டு ஆக ஐந்து பதிகங்கள் இருக்கின்றன.