இது காவிரிக்குத் தென்கரையில் உள்ள ஐம்பத்திரண்டாவது திருத் தலமாகும். காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் நகரங்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. இறைவரின் திருப்பெயர் தர்ப்பாரண்யேசுரர். தேவாரத்தில் நம் பெருமான் எனக் கூறப்பட்டுள்ளது. இறைவியாரின் திருப்பெயர் போகமார்த்த பூண்முலையாள்.இத் திருப்பெயரை இவ்வூர்ப் பதிகத்தில் ஞானசம்பந்தர் எடுத்து ஆண்டுள்ளார். தீர்த்தம் நளதீர்த்தம்; சிவகங்கை முதலியன. தலவிருக்ஷம்: தர்ப்பை. நளன் பூசித்துக் கலி நீங்கப்பெற்றான். இத்தலத்தே திருமால், பிரமதேவர், திக்குப்பாலகர், வசுக்கள், அகத்தியர், அர்ச்சுனன், போசன் முதலியோரும் வழிபட்டனர். முசுகுந்தச் சோழர் எழுந்தருளுவித்த விடங்கர் தலங்கள் ஏழனுள் இது ஒன்று. திருஞானசம்பந்தர், மதுரையில் சமணர்களோடு அனல்வாதம் நடத்தியபோது, அனலில் இடுவதற்குத் தாம் பாடிய பதிகங்களில் கயிறு சாத்தியபோது. 'போக மார்த்த பூண்முலையாள்' என்று தொடங்கும் இப்பதிக்குரிய பதிகம் கிடைத்தது. அதை அனலில் இட அது வேகாது இருந்து சைவ சமயத்தின் பெருமையை நிலைநாட்டியது. இதைப் பச்சைத் திருப்பதிகம் என்றும் கூறுவர். இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகங்கள் நான்கு, அப்பர் பதிகம் இரண்டு, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக ஏழு பதிகங்கள் இருக்கின்றன. நளன் பூசித்து வழிபட்ட செய்தி, "வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி | நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய் நள்ளாறே" |
என்னும் ஞானசம்பந்தர் தேவாரப் பகுதியால் உறுதி எய்துகின்றது. இத்தலத்தில் சனிபகவான் சந்நிதி மிகவும் சிறப்புப் பெற்றது. சனிப்பெயர்ச்சி விழாக்களில் பல்லாயிர மக்கள் நளதீர்த்தத்தில் எண்ணெய் முழுக்காடி எள்முடிச்சுக் கட்டி எண்ணெய் விளக்கேற்றி சனிபகவானை வழிபடுவர். தங்கக் காகவாகன விழா நடை பெறும். இவ்வூருக்குக் கிழக்கே ஒரு மைல்தூரத்தில் தக்களூர் என்னும் வைப்புத்தலம் இருக்கிறது. இதற்குத் தலபுராணம் ஒன்று இருக்கிறது.
|