பக்கம் எண் :

30
 

பெருமான் உயிர்கட்காகச் செய்தருளிய செயல்களையெல்லாம் புகழ்ந்து உரைப்பதாகும். சாத்திரம் என்பது பெருமான் அன்பராயினும் வன்பராயினும் நடுநிலைநின்று அவரவர்க்கு உள்ளபடி அவரவரைக்கொண்டு செலுத்தும் திறம்பாடுவது. தோத்திரங்கள் என்பது இலக்கியம் போன்றது, சாத்திரம் என்பது இலக்கணம் போன்றது. தோத்திரங்களுள் தலையாயது திருமுறை. சாத்திரங்களுள் தலையாயது மெய்கண்ட சாத்திரம். இக்கருத்தை உள்ளடக்கி எழுந்த திருத்தாண்டகம் காண்போம். இதில் இறைவன் இரவாகவும் பகலாகவும் இருக்கின்ற தன்மையையும், அந்தி - மாலைப்பொழுது. சந்தி - காலைப்பொழுது. இவ்விருபொழுதாயும் இருப்பவன் என்பதையும், சொல்லாகவும், சொல்லின் பொருளாகவும் இருப்பவன் என்பதையும் அருளியுள்ளார். சொல், வடிவத்தைக் குறிப்பது. பொருள் அச்சொல்லின் உள்ளீடாகிய பொருளைக் குறிப்பது. சொல்வடிவம் அம்மை. பொருளே அதனுள் உறையும் சிவம். இதனை, "சொல்லும் பொருளும்என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே" என்றார் அபிராமிப்பட்டர்.அப்பர் காட்டும் திருவாலங்காடு தாண்டகப் பகுதி காண்க. "அல்லும் பகலுமாய் நின்றார் தாமே, அந்தியும் சந்தியும் ஆனார்தாமே, சொல்லும் பொருளெலாம் ஆனார் தாமே, தோத்திரமும் சாத்திரமும் ஆனார்தாமே." (தி.6ப.78 பா.5).

சீலத்தார் ஏத்தும் திறம்:

சீலம் என்பது இங்கு ஒழுக்கத்தைக் குறித்தது. ஒழுக்கம் என்பது அன்பு, அருள், ஆசாரம், உபசாரம், உறவு, தவம், தானங்கள், வணக்கம், வாய்மை, அழுக்கிலாத் துறவு, வழிபடுதல் முதலிய நற்குண நற்செயல்களாம். இப்படிப்பட்டவர்களே இறைவனை ஏற்றிப் போற்றுவர். அல்லாதார் இப்பணியில் ஈடுபாடே கொள்ளார். அத்தகையோர் போற்றுதலைப் பெருமானும் கொள்ளார். இதனைப் பல இடங்களிலும் நமது ஆசாரிய மூர்த்திகள் குறிப்பிட்டுள்ளனர். சிலவற்றைக் காண்போம். திருவாலங்காடு திருத்தாண்டகம், "மாலைப்பிறை" என்னும் பாடல் நான்காம் அடியில் "சீலத்தார் ஏத்தும் திறத்தார்தாமே""திருஆலங்காடுறையும் செல்வர்தாமே" (தி.6 ப.78 பா.10) என்றும், திருவீழிமிழலைத் தாண்டகம்" ஆலைப்படு கரும்பின்" என்னும் பாடல் இரண்டாம் அடியில் "சீலம் உடை அடியார் சிந்தையான் காண்" (தி.6 ப.52பா.2) என்றும் அப்பர் அருளியுள்ளமை காண்க. ஞானசம்பந்தரும் தில்லையில் பாடியருளிய "ஆடினாய்" என்னும் பதிக மூன்றாம் பாடலில் "சீலத்தார் தொழுதேத்து சிற்றம்பலம்" (தி.3 ப.1 பா.3) என்று தில்லைவாழ் அந்தணர்களைச் சிறப்பித்துள்ளமை காணலாம்.