அடியவர் விருப்பே ஆண்டவன் விருப்பம்: உலகியலில் ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு வேறொன்று தோன்றும். அருளியலில் பெருமானைப் போலவே அடியவர்களும் "பாசம் ஒன்றிலராய், அற்றவர்க்கு அற்றவராய்" இருத்தலின் பெருமான் அருள் எதுவோ அதையே வேண்டுவதன்றி வேறொன்றை விரும்பார். இதனையே அடியவர் வழி ஆண்டவன் வருவதாகக் கூறுகிறார். திருமாற்பேறு திருத்தாண்டகமாகிய "மலைமகள்தம்" என்னும் பாடலில், "விலைபெரிய வெண்ணீற்று மேனியானை, மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை" (தி.6 ப.80 பா.3),என்றருளியுள்ளார். இதனையே மணிவாசகரும், "வேண்டத் தக்கதறிவோய் நீவேண்ட முழுதும் தருவோய் நீ" (தி.8 குழை. பா.6) என்றெல்லாம் கூறி, "வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே" என அருளிப்போந்தார். அனாசாரம் பொறுத்தருளி: இறைவழிபாட்டில் ஈடுபடுவோர் அன்பும் அச்சமும் உடையவராயிருத்தல் வேண்டும். இதனையே பயபக்தியுடையராதல் வேண்டும் என்பர். அப்பர் ஐந்தாம் திருமுறையில் அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும்எப்படியேனும் இறைவனை வழிபடுக என்று அருளினார். இது தாழ்ந்தோர் ஆசாரம். அன்பு, ஆசாரம், அச்சம் இவற்றுள் எது முதன்மையானது? பெருமான் விரும்புவனவற்றுள், அன்பே முதன்மையானது. சிவகோசரியார் அச்சத்துடனும் ஆசாரத்துடனும் வழிபட்டார். கண்ணப்பர் அச்சம், ஆசாரம் இன்றி அன்புப் பிழம்பாய் வழிபட்டார். அவரது தூய அன்பையே ஏற்றார். சிவகோசரியாருக்கும் அருள் செய்தார். திருநீலநக்க நாயனார் சாத்தமங்கை ஈசனை ஆசாரத்துடன் வழிபட்டார். இறைவன்மீது விழுந்த சிலந்திப் பூச்சியை அகற்றுவதற்கு அவர்தம் மனைவியார் அன்பு மேலீட்டால் ஊதி உமிழ்ந்தார். இங்கும் அன்பே முதன்மை பெற்றது. எனவே இறைவன் இரண்டையுமே விரும்புகிறான் என்றாலும் மிகுதியாக நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றையே என்பது தெளிவாகிறது. இதனைத் திருமாற்பேறு திருத்தாண்டகமாகிய "நீறாகி நீறுமிழும்" என்னும் பாடலில் குறிப்பிட்டுள்ளமை கண்டு கடைப்பிடிப்போமாக. உவகைக் கண்ணீர் ஆறாத ஆனந்தத்து அடியவரின் ஆசாரமற்ற செயல்களைப் பொறுத்து அவருக்கு அருளும் வழங்குகிறான். | நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி | நினைவாகி நினைவினிய மலையான் மங்கை | | கூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக் | குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர் | | ஆறாத ஆனந்தத் தடியார் செய்த | அனாசாரம் பொறுத்தருளி அவர்மேல் என்றுஞ் | | சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ் | செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. | (தி.6 ப.80 பா.5) |
|