பக்கம் எண் :

303
 

வழங்குகின்றது.

இக்கோயிலுக்குத் திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, திருநாவுக்கரசு நாயனார் பதிகம் நான்கு, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக ஏழு பதிகங்களிருக்கின்றன. சுந்தரமூர்த்தி நாயனார் பதிகத்தின் இறுதிப் பாட்டை வெள்ளிப்பாடல் என்பர். வெள்ளிப்பாடல் என்பது பின்னால் யாரோ ஒருவரால் எழுதிச் சேர்க்கப்பெற்றதாகும்.

அவர்கள் அங்ஙனங் கூறுதற்குக் காரணம் ஐந்தாம் திருப்பாடலில் "சுந்தரனே கந்தமுதலாடை யாபரணம் பண்டாரத்தே யெனக்குப் பணித்தருள வேண்டும்" என்றிருப்பதாலும், 11-ஆம் திருப்பாட்டில் "ஒளிமுத்தம் பூணாரமொண்பட்டும் பூவுங் கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும்வேண்டும்" என்றிருப்பதாலும், முதலில் கூறியவற்றுள் சில இரண்டாவது கூறியவற்றுள் காணப்படுதலால் கூறியது கூறல் என்னும் குற்றத்தின் பாற்படுத்தி, இதை வெள்ளிப் பாட்டு என்பர்.

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தலபுராணம் எழுதியுள்ளார்கள். அது அச்சில் வெளிவந்துள்ளது. அது புலவர் பெருமக்களால் பெரிதும் பாராட்டப்படும் பெருஞ்சிறப்பு வாய்ந்தது.

"கற்றோர் பயில் கடல் நாகைக் காரோணம்" என்று ஞானசம்பந்தர் கூறியிருத்தலாலும்,பாக்கு விளையாடிக்கொண்டிருந்த பாலகர்களை நோக்கிப் பசியினால் காளமேகப்புலவர் 'சோறு எங்கு விக்கும்'என்று கேட்டதற்கு, அப்பாலகர்கள் தொண்டையில் விக்கும் என்று பதில் கூறினார்கள். (விற்கும் - என்பதைப் பேச்சுவழக்கில் விக்கும் எனக் கூறுதலுண்டு). உடனே புலவர் கோபித்து அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு "பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு" என்பது வரை சுவரில் எழுதி விட்டு, பசி தீர்ந்தபிறகு எஞ்சிய பகுதியைப் பாடி முடிவு செய்வதாக வைத்துவிட்டுப் பசியாற்றிக் கொண்டு அவ்விடம் வந்தபொழுது, அவர் எழுதியதற்குமேல் "நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை" என்று அவ்விளஞ்சிறார் எழுதியதைப் பார்த்து மதிமயங்கிச் சென்றதாகத் தனிப்பாடல் ஒன்று இருக்கின்றது. இவைகளால் இவ்வூர் மக்களின் கல்வித்திறம் புலப்படும். இவ்வூரில் இருந்த காத்தான் சத்திரத்தைப் பற்றிய காளமேகப் புலவர் பாடலொன்றும் உண்டு.

இந்த ஊர் ஒரு துறைமுகம், வாணிகத்தலம். கீழைத் தஞ்சையின்