41. திருநாரையூர் நாரை பூசித்துப் பேறுபெற்றதால் இப்பெயர் பெற்றது. சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயிலுக்குப் போகும் பேருந்து வழியில் 5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. சிதம்பரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. காவிரிக்கு வடகரையிலுள்ள 33 ஆவது தலமாகும். இறைவர் பெயர் சௌந்தரேசுவரர். இறைவி பெயர் திரிபுரசுந்தரி. திருத்தொண்டர் திருவந்தாதியைப்பாடிய நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த திருப்பதி இது. தேவாரத் திருமுறைகள் கனக சபையின் மேல்பாலுள்ள ஒரு அறையில் இருந்ததை நம்பியாண்டார் நம்பி மூலமாய் வெளிப்படுத்திய பொல்லாப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் தலமும் இதுவேயாகும். பொள்ளா என்பது பொல்லா என்று வந்துள்ளது. பொள்ளாதது என்பது உளி முதலியவற்றால் செய்யப்படாதது. எனவே சுயம்பு மூர்த்தியாகும். இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் மூன்று, அப்பர் பதிகம் இரண்டு, ஆக ஐந்து பதிகங்கள் இருக்கின்றன. பொல்லாப்பிள்ளையார்தனிமண்டபம், மகாமண்டபத்தில் ஆறுமுகருடைய உருவம் கல்லில் செதுக்கப்பட்டது. அருகில் சித்தலபுரம் இருக்கிறது. நம்பியாண்டார்நம்பி இராஜராஜசோழன் உருவங்கள் மகாமண்டபத்தில் இருக்கின்றன. கோயில் விமானம் அர்த்தசந்திர விமானம், விமானத்தின் உச்சியில் இரண்டு கலசங்கள் உண்டு. பிரகாரம் 65 மீ-120 மீ. மதில் உயரம் 3 மீ. அம்பிகை தெற்குமுகம் அபயகுல இராஜராஜர் திருமுறை வகுக்கும்படி சொன்ன இடம். நம்பியாண்டார் நம்பிவகுத்தது. இருவர் விக்கிரகங்களும் உண்டு. திருமுறை கண்டபுராணம் காண்க. கல்வெட்டு: கல்வெட்டுக்கள் 4-கிடைத்தன. கி.பி.11ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை. திருநாரையூர்- தனியூரான் வீர நாராயண சலம் சேர்ந்த ஒருபிடாகை. தனியூர் ஆய ஆட்சி குலோத்துங்கசோழன் சந்தி விளக்குக்காக ஊர் ஒன்று தந்தான். கைலாசமுடையார்க்கு நித்திய
|