பக்கம் எண் :

308
 

இராஜராஜ சோழன், விக்கிரம சோழன், இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாங்குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் இவர்கள் காலங்களிலும், விசயநகர வேந்தர்களின் காலங்களிலும், பொறிக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளன்றி, காலிங்கராயன் மீது பாடப்பெற்ற பாடல்களும் இருக்கின்றன. இக்கோயில் கல்வெட்டுக்களில் இறைவர் பசுபதி தேவர், பசுபதீஸ்வரர் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர்.

எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனிகள்:

பரகேசரிவர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் இராஜராஜ தேவர் காலத்துக் கல்வெட்டில் விக்கிரம சோழீச்சரமுடையாரையும், குலோத்துங்க சோழீச்சரமுடையாரையும் எழுந்தருளுவிக்கப்பெற்ற செய்திகள் கூறப்பெற்றுள்ளன. இவ்விருதிருமேனிகளும் இக்காலம் முதற்பிராகாரத்துக் கொன்றை மரத்தடியிலும் இரண்டாம் பிராகாரத்தில் இரண்டாம் கோபுரத்துத் தென்பாலுள்ள செங்கற்கோயிலிலும் எழுந்தருளியிருப்பவையாக இருத்தல் வேண்டும்.

இவ்வூரைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு:

முதலாம் இராஜராஜன் கல்வெட்டில் இவ்வூர் பந்தணைநல்லூர் என்றே குறிக்கப்பெற்றுள்ளது. விக்கிரமசோழனது ஒன்பதாம் ஆண்டுக் கல்வெட்டில் இவ்வூர் வடகரை விருதராச பயங்கர வளநாட்டு விளத்தூர் நாட்டுப் பந்தணைநல்லூர் என்று குறிக்கப் பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளால் நாட்டுத் தொகையில் விளத்தூர்நாட்டு விளத்தூர் என்று கூறப்பெற்றுள்ள ஊர், இப்பந்தணை நல்லூர்க்குப் பக்கத்தில் இருத்தல் வேண்டும்.

இராஜராஜ நாடகம்:

முதலாம் இராஜராஜன் காலத்தில் இக்கோயிலில் நட்டுவப் பங்கு மெய்மட்டிப்பங்கு இவைகளை உடையவனாய் இருந்தவன் ஹாஸியன் விக்கிரமாதித்தன் அச்சனான இராஜராஜ நாடகப்பெரியன் ஆவன். இதில் இராஜராஜ நாடகப்பெரியன் என்பது பட்டப்பெயராகும். இப்பட்டம் இராஜராஜ நாடகத்தில் இவனுக்கு இருந்த பெரும் புலமையை விளக்குவதாகும். இந்நூல் இதுபொழுது கிடைத்திலது.