பக்கம் எண் :

309
 

கோயில் பொருளைத் திருடியவர் தண்டிக்கப்பட்டவிதம்:

இவ்வூர்ப் பசுபதீச்சரர்க்குத் திருவாபரணம் செய்யக்கொடுத்து இத்தேவர் பண்டாரத்தில் ஒடுக்கியிருந்தபொன்னிலே சிறிது பொன்னை இக்கோயிற் சிவப்பிராமணர் சிலர் கூறிட்டுக்கொண்ட குற்றத்திற்காக, இச்சிவப்பிராமணரும் இவர்கள் வம்சத்தாரும் இக்கோயிலிலும், இக்கோயிலில் எழுந்தருளிவித்த விக்கரம சோழீச்சரமுடையார் கோயிலிலும், குலோத்துங்க சோழீச்சர முடையார் கோயிலிலும் புகுதல் கூடாதென்றும், இவர்கள் கூறிட்டுக்கொண்ட குற்றத்திற்காக நூற்றெண்பது காசை இக்கோயில் திருப்பணிக்கு உடலாக ஒடுக்க வேண்டுமென்றும், அரசன் ஆணையிட்டுள்ளான். இது நிகழ்ந்தது, "பூமருவிய பொழிலேழும் பொருப்பேழும் புனைந்தருளி" எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியை யுடைய பரகேசரி வர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் ஆறாம் ஆண்டு ஐம்பத்தைந்தாம் நாளாகும்.

கல்வெட்டுக்களைப் பாதுகாத்தவிதம்:

'பழங்கல்வெட்டிற் கண்டபடி' என்று முதலில் எழுதப்பெற்று, அதன்கீழ் "ஸ்வஸ்திஸ்ரீ கோராஜகேஸரிவர்மற்கு யாண்டு (10) பந்தணைநல்லூர்ப் பசுபதி தேவற்கு" என இக்கோயில் அர்த்த மண்டபத்தின் தென்புறத்தில் ஒரு 1கல்வெட்டுத் தொடங்குகிறது. இதனால் கோயிலைப் புதுப்பிக்குங்காலை அதில் கல்வெட்டு இருந்தால் அதை அவ்வாறே புதுப்பித்த கோயிலில் செதுக்கி வைப்பது பண்டைய வழக்கமென்று தெரிகின்றது.

காலிங்கன் எல்லனைப்பற்றிய கல்வெட்டுப் பாடல்கள்:

இப்பாடல்கள் முதற்கோபுரத்து வாசலின் வடபால் சுவரில் இருக்கின்றன. இவைகள் காலிங்கனது புகழைப்பற்றிக் கூறுகின்றன. இவன் தமிழில்மிக்க அன்புடையவன் என்றும், கொடையில் பாரியிலும் மேம்பட்டவன் என்றும், பலவாறாகப் பேசப்படுகின்றான். இக்கல்வெட்டுக்களின் எழுத்துக்களை நோக்கின் இவன் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவனாதல் வேண்டும். இப்பாடல்களில் ஒன்று பின்வருமாறு:


1 See the Annual reports on South Indian Epigraphy for the year1931 No.69-74,year1932 No.115-120.

குறிப்பு: இக்கோயில் கல்வெட்டுக்களை நேரில் படித்து வரலாறு எழுதப்பெற்றுள்ளது.