பக்கம் எண் :

316
 

கொடுக்கப்பெற்றிருக்கிறது1. அரசனாலேயே 25 பசுக்களும் ஒரு காளையும் விளக்கிற்காகக் கொடுக்கப்பெற்றிருக்கின்றன2. சோழ தேசத்தில் கயாமாணிக்க வள நாட்டு மருகல் நாட்டுப் புத்தனூரில் வசித்த ஒருவர் 25 பசுக்களையும் ஒரு காளையையும் விளக்கிற்காகக் கொடுத்தார்.3 காளிங்கராயன் வேண்டுகோளுக்காக இரண்டு கிராமங்கள் அளிக்கப்பெற்றன. உலக முழுதுடையாள் என்னும் அரசியால் மடப்பள்ளித் திருப்பணி செய்யப் பெற்றது4

பராக்கிரம பாண்டியன்:

இவன் காலத்திய கல்வெட்டுக்கள் 4 உள்ளன. அவற்றால் இவன் ஆட்சி பதினொராம் ஆண்டில் புறமலைநாட்டுப் பொன்னமரா வதியான இராஜேந்திரசோழ நிஷதராயன் என்பவனால் திருத்தளி உடையார் கோயில் உற்சவத்திற்காக நெல் அளிக்கப்பெற்றது5. திருப்புத்தூர்ச் சபையார்கூடி நரலோக வீரன் சந்தி என்னும் விழாவிற்காக நிலம்விற்றுக் கொடுத்த வரலாறு அறிவிக்கப்பெறுகிறது6. ஓர் அந்தணனால் திருப்பள்ளி அறை நாச்சியார் நிவேதனத்திற்காகப் பொன் அளிக்கப்பெற்றது. உய்யவந்தான் கண்டிதேவனான காங்கேயன் என்பவனால் கோயிலுக்கு அளிக்கப்பெற்ற சாசனங்கள் பட்டியலாகக் குறிக்கப்பெற்றிருக்கின்றன.

குலசேகர பாண்டியன்:

நியமம் என்னும் ஊரான் ஒருவனால் விளக்குத்தண்டுக்காகப் பொன்னும், தேனாற்றுப்பாசன வசதியும் செய்து கொடுக்கப்பெற்றதாக அறியப்பெறுகிறது. அதிசயப் பாண்டிய நல்லூரான குட்டக்குடியில் கண்டன் உய்யவந்தானான காங்கேயனால் திருப்பதியம் விண்ணப்பிப்பார்க்கு இறையிலியாக அளிக்கப்பெற்றது. இந்த நிலம், வீரகுணப் பெருமாள் என்பவரால் திருப்புத்தூர் திருத்தளியிலுள்ள கூத்தாடு தேவரான நடராஜ தேவருக்கு அளிக்கப்பெற்றிருந்தது. அதே கோயிலிலுள்ள சைவமடம் ஒன்றிற்குத் திருவாலந்துறை உடையானான திருக்கொடுங்குன்ற முடையான் நிஷதராஜனால் சில வரிகள் வசூலித்துக்கொள்ள உரிமை அளிக்கப்பெற்றது. திருப்புத்தூர் மூலபரிஷத் என்னும் சபையார் மதுரைசென்று கோயில் நிலங்களுக்கு வரி கட்டி வரவேண்டியதற்காக வழிப்பயணச்செலவான ஒரு குறிப்பிட்ட தொகையைத் தள்ளுபடி செய்து கொடுத்திருக்கிறான்.


1.93of 1908, 2-108 of1908, 3-109 of 1908, 4-115 of 1908, 5-94 of 1908, 6-98of 1908,