சகம் 1432இல் பாண்டி மண்டலத்து கேரளசிங்க வளநாட்டுக் கிராமங்களான நாரணமங்கலம், காரையூர் என்ற இரண்டையும் நரசிம்மராய செல்லப்பரது சந்திக்காகக் கோயிலுக்கு அளித்தான். அவை இரண்டும் இப்பொழுது செல்லப்பாபுரம் என்று வழங்கப்படுகின்றன. அச்சுத தேவ மகாராயர் காலத்தில் அருவியூர் நகரமான குலசேகரப் பட்டினத்தான் ஒருவனால் விளக்கிற்காக நிலம் அளிக்கப்பெற்றிருக்கிறது 1. பெரிய ராமப்பநாயகருக்கு நன்மை உண்டாக வயிரவருக்கு நிலம் அளிக்கப்பெற்றது. கிருஷ்ணராயர் காலத்து வீரநரசிம்மராய நாயக்கரான செல்லப்பர் நன்மைக்காகத் திருப்புத்தூர் உடையான் சிங்கம நாயக்கனால் நிலம் வழங்கப்பெற்றது 2. நாகமநாயக்கர் மகனான விசுவநாத நாயக்கர் நன்மைக்காக ஒரு கிராமம் (வரகுண புத்தூர்) வழங்கப்பட்டது. இவையன்றி நின்ற நாராயண பெருமாள் கோயிலுக்கும் அங்காளம்மன் கோயிலுக்கும் நிபந்தங்கள் அளிக்கப் பெற்றிருப்பதை அறிவிப்பன மூன்று கல்வெட்டுக்கள். இங்ஙனம் திருப் புத்தூர்க்கோயில் பல பாண்டிய மன்னர்களுடைய சமய உணர்ச்சிக்கு அரணாக இருந்தமை அறிந்து இன்புறுதற்குரியது. 49. திருப்புள்ளிருக்குவேளூர் சம்பாதி, சடாயு, என்ற கழுகரசர் இருவர்களும், வேதங்களும், முருகக்கடவுளும், சூரியனும் பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது. இது வைத்தீசுவரன்கோயில் என்று வழங்கப் பெறுகின்றது. இது மயிலாடுதுறை - சிதம்பரம் தொடர்வண்டிப் பாதையில், வைத்தீசுவரன் கோயில் தொடர்வண்டி நிலையத்திற்குக் கிழக்கே 1கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. மயிலாடுதுறையிலிருந்து சீகாழி செல்லும் பேருந்துகளில் வைத்தீசுவரன் கோயில் என வழங்கும் இத்தலத்தை அடையலாம். இது காவிரியின் வடகரைத் தலங்களுள் ஒன்று. இறைவரின் திருப்பெயர் வைத்தியநாதர். இறைவியாரின் திருப்பெயர் தையல்நாயகி. முருகன் - செல்வமுத்துக் குமாரர். தீர்த்தம் சித்தாமிர்தத் தீர்த்தம். இது திருக்கோயிலின் உள்ளே இருக்கின்றது. இது மிகப்பெருமை வாய்ந்தது. இதில் நீராடியவர்நோய்
1-112 of 1908, 2-91 of 1908.
|