என்னும் அவரது தேவாரப் பகுதியிலும் சொல்லப்பட்டு உள்ளது. "மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்" என்னும் அப்பர்பெருமானின் தேவராப் பகுதி, இறைவன் வைத்திய நாதர் என்னும் பெயர் பூண்ட காரணத்தைப் புலப்படுத்துவதாகும், இங்ஙனம், இவ்வூர்த் தேவாரப்பகுதிகளில் பல சரித்திர சம்பந்தமான உயர்ந்த செய்திகள் காணப்படுகின்றன. இக்கோயில், திருக்கயிலாய பரம்பரைத் திருத்தருமை ஆதீன அருளாட்சிக்குட்பட்டது. இதுபொழுது இருபத்தாறாம் பட்டத்தில், தருமை ஆதீனத்தில் அருளாட்சி நடத்தி வரும் மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் அவர்கள் ஒவ்வொரு வாரத்தில் செவ்வாய்க் கிழமையிலும், ஒவ்வொரு மாதத்தில் கிருத்திகை நாளிலும் வைத்தீசுவரன் கோயிலுக்கு எழுந்தருளி வழிபாடு செய்தருளுகின்றார்கள். இக்காலங்களிலன்றி, நிர்வாகத்துறையில் திடீரென்று எழுந்தருளி நித்திய நைமித்திகங்கள் உரிய காலங்களில் நன்கு நடைபெறுகின்றனவா எனவும் கவனித்தருளுகின்றார்கள். கல்வெட்டு: சகம் 1814 (கி.பி. 1892) நகரத்தாரால் திருப்பணியும் குடமுழுக்கும் செய்யப்பட்டன. சகம் 1689 (கி.பி. 1767) ராஜாமகாராசர் காலத்தில் முத்துக்குமாரசாமித் தம்பிரானால் திருப்பணி செய்யப்பட்டது. சகம் 1682 (கி.பி. 1770) துளஜாமகாராசர் காலத்தில் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது. சகம் 1802 (கி.பி. 1880) கொடிக்கம்பம் தங்கமயம் ஆக்கப்பட்டது. 50. திருப்புறம்பயம் பக்கத்தே தண்ணீரையுடையது என்று பொருள்படும். இதற்கு ஏற்ப திருக்கோயிலின் மேல்புறத்தில் மதிலை ஒட்டி நீர்நிலை இன்றும் இருக்கின்றது. ஒரு காலத்தில் பிரளயம் வந்தபொழுது அது ஊரினுள் புகாதவாறு தடைப்பட்டு புறத்தே நின்றமையால் இப்பெயர்பெற்றது என்பர். அதற்கு ஏற்ப இவ்வூர்த் தல விநாயகர்க்குப் பிரளயங்காத்த விநாயகர் என்ற பெயர் இருக்கின்றது. கும்பகோணத்திற்கு வடமேற்கே 9 கி.மீ. தூரத்தில் மண்ணியாற்றின் வடகரையில் இருக்கின்றது. கும்பகோணத்திலிருந்து
|