பெற்றார்கள். இத்தலத்திற்குத் தமிழில் ஒரு புராணம் இருக்கின்றது. அது இதுவரை அச்சிடப்பெறவில்லை. அதை ஆக்கியோரும் இன்னா ரென்று புலப்படவில்லை. இத்தலத்திற்கு உலா ஒன்று இருந்தது. அதில் சில கண்ணிகள்தான் கிடைத்துள்ளன. இத்தலத்திற்குப் புறம்பயமாலை என்ற நூலும் உண்டு. அதில் பத்துப் பாடல்களே கிடைத்துள்ளன. எஞ்சியவைகள் கிடைத்தில. அவைகளைத் திருவையாறு, வித்துவான், திரு.வை. சுந்தரேச வாண்டையார் அவர்கள் அச்சிட்டு உள்ளார். இத்தல விநாயகர்க்குப் பிராளயங்காத்த விநாயகர் என்று பெயர். இவருடைய திருமேனி கடல்படு பொருள்களாகிய இப்பி, சங்கு இவைகளால் ஆக்கப்பெற்றுள்ளது. இவர்க்கு ஆண்டுதோறும் ஆவணி மாதத்துச் சதுர்த்தியில் ஒரு ஆடம்தேன் அபிடேகம் நடை பெற்று வருகின்றது. அவ்வளவு தேனும் அவர் திருமேனியில் சுவறி விடுகின்றது. இங்குத் தட்சிணாமூர்த்திக்குத் தனிக்கோயில் சந்நிதியில் இருக்கிறது. வணிகப் பெண்ணின் பொருட்டுச் சிவபெருமான் மதுரை சென்று சாட்சி பகர்ந்தததை உணர்த்தும் நாடகம் ஒன்று இவ்வூரில் வைகாசிமாதத்தில் நடைபெறுகின்றது. அதை மக்கள் 'வன்னி நாடகம்' என்று கூறுகின்றனர். இக்கோயில் பணிமகளாராகிய ஒரு அம்மையார் ஆதனூரில் உள்ள தம் காதல் கிழவனிடம் ஒரு நாள் மாலைப்பொழுதில் செல்லும் பொழுது மண்ணியாற்றில் ஓடம் விட்டவன். யாரும் இல்லாத நிலையை உணர்ந்து, அவ்வம்மையாருடைய அணிகலன்கள், கூறைகள் முதலியவைகளைப் பறித்துக்கொண்டு அவளைக்கொன்று ஆற்றில் தள்ளிவிட்டான். ஆற்றைக் கடப்பதற்குள் அவனும் தவறி ஆற்றில்விழுந்து இறந்துவிட்டான். இவ்வரலாற்றை உட்கொண்டுதான், நிறைமொழி மாந்தராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், "குற்றொ ருவரைக் கூறை கொண்டு | கொலைகள் சூழ்ந்த களவெலாஞ் | செற்றொ ருவரைச் செய்த தீமைக | இம்மை யேவருந் திண்ணமே" |
|