பக்கம் எண் :

327
 

தென்னவன் கூன் நிமிர்த்தருளித் திருநீற்றின் ஒளி பரப்பித் திரும்பி வந்து திருப்பூந்துருத்தியை அடைந்தார். அதுபோது அவருடைய முத்துச் சிவிகையினை ஒருவரும் அறியாது தாங்குவாருடன் தாங்கிவந்து சம்பந்தர், 'எங்குற்றார் அப்ப' ரெனக் கேட்டபோது, 'அடியேன் உம்மடிகள் தாங்கி வரும் பேறு பெற்றிங்குற்றேன்' என்று அப்பர் பெருமான் கூறியதும் ஞானசம்பந்தர் சிவிகையினின்றும் இறங்கி இருவரும் வணங்கி அளவளாவிச் சில காலம் தங்கியிருந்த திருத் தலமாகும். இதற்குத் திருப்பதிகங்கள் மூன்று உள்ளன.

53. திருப்பூவணம்

இது புட்பவனக்காசி என்றும் கூறப்பெறும். மதுரைக்குக் கிழக்கே 18. கி.மீ. தூரத்தில் இருக்கிறது. திருப்பூவணமே ஒரு தொடர் வண்டி நிலையம். கோயில் இந்தத் தொடர் வண்டி நிலையத்தில் இருந்து கிழக்கே 1. கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

இறைவர் திருப்பெயர் - பூவணநாதர். இறைவியின் திருப்பெயர் - மின்னம்மை. மரம் - பலா. தீர்த்தம் - வைகை.

சிவநெறிப்பற்றுச் சான்ற பொன்னனையாள் என்னும் அம்மையாரின் பொருட்டு, மீனாட்சி சுந்தரேசுவரர் சித்தர் வடிவமாய் எழுந்தருளி இரச வாதம் செய்து, சோமாஸ்கந்தர் திருமேனி அமைக்குமாறு அருள்செய்த பதி. தமிழ்நாட்டு மூவேந்தர்களோடு சுந்தரர் வழிபட்ட பதிகளுள் இதுவும் ஒன்று.

இத்தலத்திற்குத் தல புராணம் ஒன்றையும் உலா ஒன்றையும் கந்தசாமிப் புலவர் இயற்றியுள்ளனர். அவைகள் அச்சில் வெளிவந்துள்ளன.

இக்கோயிலின் கொடுங்கைகள் திருப்பெருந்துறையைப் போல அருமையான வேலைப்பாடுகள் பொருந்தியுள்ளன. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் இரண்டும், அப்பர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் ஆக நான்கு பதிகங்கள் இருக்கின்றன.

கல்வெட்டு:

இத் திருக்கோயிலில் பாண்டியர்களில் கோநேரின்மை கொண்டான், பராக்கிரம பாண்டிய தேவர் காலங்களில் செதுக்கப்பட்ட