பக்கம் எண் :

33
 

அருளியுள்ளார். மேலும், "கந்த மலர்" என்ற தாண்டகத்தில் "நமது பந்தங்களை அறுத்து ஆளாகக்கொண்டு தமிழ் மாலை பாடுமாறு செய்து சிந்தையில்உள்ள மயக்கத்தைப் போக்கி அருள் புரிகின்றான்" (தி.6 ப.84 பா.4)என்கிறார். அப்பாடல் பகுதி காண்க.

"பந்தமறுத்து ஆளாக்கிப் பணிகொண்டு ஆங்கே

பன்னியநூல் தமிழ் மாலை பாடுவித்துஎன்

சிந்தை மயக்கறுத்த திருவருளினானைச்

செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே"

(தி.6 ப.84 பா.4)

மேலும் "கல்லாதார் மனத்தகத்து" என்னும் பாடலில்" கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன்" (தி.3 ப.40 பா.3) என்னும் ஞானசம்பந்தர் வாக்கைப் போலவே அப்பரும் அருளியது காணலாம். "கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக், கற்றார்கள் உற்றோரும் காதலானை" (தி.6 ப.84 பா.8). மேலும் இப்பாடல் இறுதியில், "நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து" என்றும், செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானைச் செங்காட்டங் குடியதனில் கண்டேன்" (தி.6 ப.84 பா.8) என்று அருள்வதும் காண்க. திருமுண்டீச்சரம், "நம்பன் காண்" என்னும் தாண்டகத்தில் "ஏசற்று மனம் உருகும் அடியார் தங்கட்கு அன்பன் காண்"(தி.6 ப.85 பா.3) என்பதும் சிந்திக்கத் தக்கது.

தானம் தர்மம்:

தானம் தம்மிற் பெரியார்க்குக் கொடுப்பது, தர்மம். தம்மில் தாழ்ந்த ஏழைகட்கு அளிப்பது, ஒவ்வொரு நாளும் மூன்று சந்தியாகாலங்களிலும் அர்க்கியம் கொடுப்பதைப் பெருமானே ஏற்றுக்கொள்கிறார். எல்லாம் அவரையே சேரும். அவரைவிடப் பெரியார்யாரும் இல்லை. ஆதலின் அவருக்கே தானம் சேரத்தக்கது. இதனை, "தானத்தின் முப்பொழுதும் தாமே போலும், தம்மிற் பிறர் பெரியார் இல்லார் போலும்"(தி.6 ப.89 பா.4) என்று அறிவிக்கின்றார். ஏழாம் பாடலில், கல்லாதார்காட்சிக்கு அரியார் போலும், கற்றவர்கள் ஏதம்களைவார் போலும், என்று கல்லார்க்கும் கற்றார்க்கும் அருள் செய்யும் திறன் கூறுகிறார்.

மறந்தும் அரன்திருவடிகள் நினையாதேன்:

அறத்தின் உண்மையைச் சிறிதும் உணராத ஊத்தை வாய்ச்சமணரொடு அரனை மறந்திருந்தேன். மறந்துங்கூட அரனை நினையாத மதியிலியேன் ஆயினேன், பல்லாண்டுகள் வாழ்ந்தும் அரனை நினையாமையால் வாழாதவனாயினேன், அந்நாள்களெல்லாம் பிறந்த நாள்களல்லவாயின, இறுதியில் சில நாள்களே, சில ஆண்டுகளே ஈசன் பேர் பிதற்றி அடியேன் அடிமைத்திறத்துன் அன்பு செறிந்து எறும்பியூர் மலைமேல் உள்ள மாணிக்கத்தைச் சென்றடையப் பெற்றேன், பன்னாள்களைப் பாழாக்கிவிட்டேனே என்று இரங்கி, இன்று எறும்பியூர்ப் பெருமானை வணங்கும் பேற்றால் இறும்பூதெய்துகிறார். அப்பாடல் காண்க.