பக்கம் எண் :

34
 
அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை

ஆரம்பக் குண்டரோடு அயர்த்து நாளும்,

மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா

மதியிலியேன் வாழ்வெல்லாம் வாளாமண்மேல்

பிறந்த நாள் நாளல்ல வாளா ஈசன்

பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்துள் அன்பு

செறிந்து எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்

செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே"

(தி.6 ப.91 பா.8)

இப்பாடலாலும் அப்பர் புறச் சமயத்திருந்தபோது சிவநெறி உணர்வின்றியிருந்தார் என்பது தெளிவாகும். பெருமான் இவரை அடிமையாக ஏற்றபிறகே, நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் என்பதும், சலம்பூவொடு தூபம்மறந்தறியேன் என்பதும் நிகழ்ந்தன என்பதும் நன்கு தெளியலாம்.

அப்பன்நீ அம்மைநீ:

"அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம்" என்பது கொன்றைவேந்தன்."மாதாபிதா, குரு தெய்வம்" என்பது பழமொழி. கண்ணுக்குப் புலனாகும்மாதா பிதாவாகிய தெய்வங்களைக் காட்டி, இவர்களை யெல்லாம் நமக்குத் தந்தவனே எல்லாவற்றிற்கும் மூலமாக இருக்கும் பரம்பொருள் என்பதை"அப்பன் நீ" என்னும் தாண்டகத்தால் உணர்த்துகிறார், அப்பன் என்பது தந்தையையும், அம்மை என்பது தாயையும், ஐயன் என்பது குருவையும் குறிப்பதாகக் கொள்ளலாம். அன்புடைய என்ற சொல் இடைநிலைத் தீவகமாக எல்லோரையும் பற்றுமாறுள்ளது. ஒண்பொருள் என்பது அறத்தால் ஈட்டிய பொருளைக் குறிக்கிறது.குலம், சுற்றம், ஊர் என்பன, உயிர் ஒரு வரையறைக்குட்பட்டே வாழவல்லது என்பதைக் காட்டுகிறது. துய்ப்பன என்பது அநுபவித்தல், உய்ப்பன அநுபவத்திலே செலுத்துதல். இப்படி அநுபவத்தில் செலுத்தி நுகரச்செய்து அதற்கும் உடனாயிருந்து துணை செய்து என்நெஞ்சந் துறப்பிப்பவனும் நீயே, ஆதலின்இப்பொன், மணி, முத்து, இறைவன் எல்லாம் நீயாகவே இருக்கின்றாய் என்றருள்கிறார். அறவிடையூரும் செல்வனாகவும் இருக்கின்றான் என்கிறார். ஐயன் -அண்ணன் என்பர் அருணைவடிவேலனார். அப்பாடல் காண்க.

அப்பன்நீ, அம்மைநீ, ஐயனும்நீ

அன்புடைய மாமனும், மாமி யும்நீ

ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ

ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும் நீ

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ

துணையாய்என் னெஞ்சம் துறப்பிப் பாய்நீ

இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ

இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

(தி.6 ப.95 பா.1)