நாம் வணங்கும் கடவுள்: எவ்வளவு குற்றம் உடையவரே ஆயினும், முழுமுதற்பரம் பொருளிடத்து உண்மை அன்புடையவராயின் அவர் அடியவர்களால் வணங்கத்தக்கார் என்பதையே "புலையரேனும் நாம் வணங்கும் கடவுளாரே" (தி.6 ப.95 பா.10) என்ற தொடர்நமக்கு உணர்த்துகிறது. சங்குவடிவில் குவிந்துள்ள நிதி, பதும வடிவில் குவிந்துள்ளநிதி இவற்றுடன், பூவுலகத்தோடு தேவ உலகும் ஆளத்தருவரேனும் மகாதேவனாகிய சிவபெருமானிடத்து அன்பில்லையானால் அழியும் செல்வமாகிய அவற்றை உடையாரை மதியோம். உடலின் உறுப்புக்களெல்லாம் பெருநோயால் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத்தின்று உழலும் புலையராயினும், கங்கைவார் சடைக்கரந்த கண்ணுதல் பெருமானிடத்து அன்புடையாராயின், அவரையே நாம்வணங்கும் கடவுளாகக் கொள்வோம் என்று அருளியுள்ளார். இக்கருத்தை முண்டகஉபநிடதம் கூறுகிறது. நீலகண்ட பாடியத்தும் காட்டப்பட்டுள்ளது. பின் வந்தோர் இப்பகுதியை மறைத்துள்ளனர். ஆயினும்மாதவச் சிவஞான யோகிகள் இக்கருத்தைத் தாம் பாடியருளிய கலைசைப்பதிற்றுப்பத்தந்தாதியில் ஒருபாடலில் குறிப்பிட்டுள்ளமை கண்டு மகிழலாம். | சிவன்எனும் மொழியைக் கொடியசண் டாளன் |  செப்பிடின் அவனுடன் உறைக,  |  | அவனொடு கலந்து பேசுக அவனோடு |  அருகிருந்து உண்ணுக என்னும்  |  | உவமையில் சுருதிப் பொருள்தனை நம்பா |  ஊமரோடு உடன்பயில் கொடியோன்  |  | இவன்எனக் கழித்தால் ஐயனே கதிவேறு |  எனக்குஇலை கலைசைஆண் டகையே.  |  -மாதவச் சிவஞான யோகிகள்  |  
 இக்கருத்தைத் தெளிவுறுத்தும் அப்பர் தனித்திருத்தாண்டகத்தை ஓதி உணர்ந்து உய்திபெறுவோம். | சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து |  தரணியொடு வான்ஆளத் தருவ ரேனும்,  |  
  
 |