மனத்துள் தேவர் என்றே கல்வெட்டுகளில்1 அழைக்கப்படுகிறார். உடையார் மனத்துள் நாயனாரதுகோயில் காரியம் பார்ப்பார் சிலரால் தேவப்பெருமான் திருமடத்து எதிர் ஒப்பிலாதார் சோமநாத தேவ முதலியாருக்கு நிலம் மாற்றிக் கொடுக்கப்பட்டது 2. இந்தத் திருமடம் மனத்துள் நாயனார் கோயிலுக்குத் தெற்குப் பக்கத்தில் இருக்கிறது 3. தென் விடங்கலூர், குலோத்துங்க சோழ நல்லூர் திரிசூலம், பொன் வேய்ந்த பெருமாள் நல்லூர் முதலிய கிராமங்கள் பல வேறு காரியங்களுக்குத் தானமாக அளிக்கப்பெற்றமை அறியப் பெறுகின்றன. திருமூல தேவர் திருமடத்தில் இருந்த கோயில் அர்ச்சகர் ஒருவருக்கு நிலம் விற்கப்பெற்றது என்பதால் திருமூலதேவர் மடம் என்பது ஒன்று இருந்தமை புலனாகும் 4. 62. திருவாய்மூர் இது திருக்குவளை என்று இக்காலம் வழங்குகின்றது. திருக்கோளிலிக்குத் தென்கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் ஒன்றாகும். திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரணியம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். இறைவர் திருப்பெயர் வாய்மூர்நாதர். இறைவியார் திருப்பெயர் பாலினுநன்மொழியாள். தீர்த்தம் சூரியதீர்த்தம். இது கோயிலுக்கு எதிரில் இருக்கிறது. தலவிருட்சம் பலா. விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் ஏழனுள் ஒன்று. இவர் நீலவிடங்கர், நடனம் கமலநடனம். சூரியன் பூசித்துப் பேறு பெற்றான். சைவப் பெருமக்களாகிய அப்பரும், சம்பந்தரும் திருமறைக் காட்டில் எழுந்தருளியிருந்தபொழுது வாய்மூர் இறைவர் அப்பர் கனவில் தோன்றி "நாம் வாய்மூரில் இருப்போம் வா" என்றனர். உடனே அப்பர் விரைவில் எழுந்து இறைவரைத் தொடர்ந்து சென்றார். திருக்கோயிலுக்கு அருகில் சென்றதும் இறைவர் மறைந்துவிட்டனர்.
1 110 of 1911, 2 108 of 1911, 3 109 of 1911, 4 116 of 1911.
|