| இறைவர் திருப்பெயர் திருவெண்காட்டீசர், சுவேதாரண்யேசர். இறைவி திருப்பெயர் பிரமவித்யாநாயகி. தீர்த்தம்: முக்குளங்கள் - சூரிய தீர்த்தம், அக்கிநி தீர்த்தம், சந்திரதீர்த்தம். இக்குளங்களில் நீராடி வழிபடுகிறவர்கள் பிள்ளைப்பேற்றை அடைவார்கள். அவர்களைத் தீவினைகள் அடையா. இச்செய்திகளை இத்தலத்துக்குரிய, | பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை |  | வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும் |  | வேயன தோளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் |  | தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே |  | -தி.2 ப.48 பா.2 | 
 என்னும் திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் (பண் - சீகாமரம், பாட்டு. 2.) இனிது தெளிவு படுத்தும். இதற்கு திருப்பெண்ணாகடத்தில் அச்சுதகளப்பாளர் என்பார் ஒருவர் புத்திரப்பேறின்றி இருந்தார். அவர் தமது ஆசாரியர் அருணந்தி சிவாசாரியர் அருளியபடி, திருமுறையில் கயிறுசாத்தினர். சாத்திய பொழுது ஞானசம்பந்த சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய "பேயடையா பிரிவெய்தும்" என்னும் மேற்குறித்த திருப்பாடல் தோன்றிற்று. அதிலுள்ள "வெண்காட்டு முக்குளநீர் தோய் வினையார் பிள்ளையினோடு உள்ள நினைவாயினவே வரம்பெறுவர். ஒன்றும் ஐயுறவேண்டாம்" என்னும் பொருளை அறிந்து மகிழ்ந்து, திருவெண்காட்டிற்குத் தம் மனைவியாரோடு சென்று, முக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டார். இங்ஙனம் வழிபட்டுவரும் நாள்களில் ஒரு நாள் இறைவன் அவரது கனவில்தோன்றிச் சைவ சித்தாந்தத்தை நிலைபெறச் செய்யக்கூடிய ஒரு புத்திரனை நீ அடைவாய் என்று சொல்லி மறைந்தருளினார். அவ்வாறே அவர் புத்திரப்பேற்றை அடைந்தார். இக் குழந்தையே சைவசித்தாந்த பரமாசாரியராக விளங்கிய மெய்கண்ட தேவர் ஆவர். தலவிருட்சம்: ஆலமரம்; கொன்றைமரம். |