புழுதியுடன் வரச் செய்தார். அப்பர் அவற்றையெல்லாம் புரட்டி எறிந்தார். அரம்பையர் ஆடல் பாடல் காட்டி அசைத்தனர். அரன் அடிக்கே பதித்த நெஞ்சினரானதால், அசையவில்லை. அற்றார்க்கு அற்றானாய இறைவற்கு ஆளாயினார் அப்பர். சுரும்பமரும் குழல் மடவார் கடைக்கண்ணோக்கில் துளங்காத சிந்தையராய்த் துறந்தோராகிய அப்பர் உள்ளத்தைத் தேடிப்புகலூர்ப் பெருமான் பெரும் பயனாய் வந்து பொருந்தினார். "எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ" (தி.6 ப.99 பா.1) எனத் தொடங்கும் திருத்தாண்டகப் பதிகம் பாடி, "புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன், பூம்புகலூர் மேவியபுண்ணியனே" என்று போற்றி, ஒரு சித்திரைச் சதயத்தில் புண்ணியன் திருவருளில் சிவபிரான் திருவடி நீழலில், இரண்டறக் கலந்தருளினார். இரண்டாவது பாடல் இறுதியில் "சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன். திருப்புகலூர் மேவிய தேவதேவே, "என்பதைத் தவிர மற்ற ஒன்பது பாடல்களிலும் "பூம்புகலூர் மேவிய புண்ணியனே" என்றே பாடியுள்ளார். நிறைவுப் பாடலில் "கருவரைசூழ் கானல் இலங்கை வேந்தன் கடுந்தேர் மீது ஓடாமைக் காலாற் செற்ற பொருவரையாய் உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே" என்று நிறைவு செய்துள்ளார்.அப்பர் "கூற்றாயினவாறு" என்று தொடங்கிய போதும் கயிலையையும் இராவணனையும் நினைவு கூர்ந்தார். மேலும் ஒவ்வொரு திருப்பதிகத்தின் நிறைவுப்பாடலிலும் நினைவு கூர்ந்தார். நிறைவிலும் கயிலையையும், இராவணனையும், நினைவுகூர்ந்தே நிறைவு செய்துள்ளார். கயிலை மலைக்கு மேல் இராவணன் தேர் ஓட முயன்றதாகவே நிறைவுப் பாடலில் குறிப்பிட்டுள்ளமையும், கண்டு உணரத்தக்கது. ஆட்பட்டபோதும் கயிலை உணர்வு, முத்திப்பேற்றிலும் கயிலை உணர்விலேயே நிறைந்துவிட்டார் அப்பர். இத்திருமுறையைப் பொருளுணர்வுடன் ஓதுவோரும், கேட்போரும் இனிதே வாழ்வர். வாழ்வாங்கு வாழ, அருள்மிகு செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம். கயிலை மலையானே போற்றி, போற்றி
|