பிரிவுகள் உடையன. அவற்றுள் பண்ணாங்கம் தாள அமைப்புடன் கூடிய பதிகங்களாகும். திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருவிருத்தம், திருத்தாண்டகம் ஆகியன சுத்தாங்கமாகப் பாடுவதற்கு உரியன. தேவாரத்தை விரும்பிக் கேட்போர் இவற்றை திருமுறை இசைவாணர்களின் மூலமாகப் பாடச்செய்து, கேட்டு மகிழ்வெய்துவர். திருவிருத்தம் நான்காம் திருமுறையில் அமைந்துள்ளது. திருத் தாண்டகம் ஆறாம் திருமுறையாக விளங்குகிறது. பன்னிரு திருமுறைகளில் தாண்டகம் என்ற யாப்பு வகையில் திருமுறை அருளியவர் திருநாவுக்கரசு சுவாமிகளே ஆவார். அதனால் இவர் தாண்டக வேந்தர் , தாண்டகச் சதுரர் எனப் போற்றப்படுகிறார். இறைவன் புகழை விளங்க விரித்துரைக்கும் முறையில் தாண்டக யாப்பு வகை இவருக்குப் பெரிதும் துணை செய்துள்ளது. நான்காம் திருமுறையில் அப்பர் அருளிய நேரிசைப் பதிகங்கள் குறுந்தாண்டகம் என்ற யாப்பு அமைப்பையும், ஆறாம் திருமுறையில் அமைந்துள்ள திருத்தாண்டகங்கள் நெடுந்தாண்டகம் என்ற யாப்பு அமைப்பையும் உடையன என்பர் இலக்கிய ஆய்வாளர்கள். திருத்தாண்டகங்களை அப்பர் பல்வேறு பொருள் முறைகளில் அருளிச் செய்துள்ளார். சிவபெருமானுடைய திருவடையாளங்களை உரைப்பனவாகத் திருவதிகை (தி.6 ப. 4), திருப்பூவணம் (தி.6 ப. 18) திருத்தாண்டகங்கள் அமைந்துள்ளன. போற்றிக் கூறும் முறையில் திருவதிகை (பதி. 5), திருவாரூர்(தி.6 ப. 32), திருக்கயிலை (தி.6 ப. 55, 56, 57) திருத்தாண்டகங்கள் அமைந்துள்ளன. இளமையில் இறைவனை இகழ்ந்திருந்தமைக்கு வருந்தும் முறையில் திருப்புன்கூரையும் திருநீடூரையும் (தி.6 ப. 11) இணைத்துப் பாடிய திருத்தாண்டகம் அமைந்துள்ளது. திருவடிகளைத் தன்முடியில் சூட்டியதற்கு மகிழும் முறையில் திருநல்லூர் (தி.6 ப. 14) திருத்தாண்டகமும், மயக்கினை விலக்கியருள வேண்டும் முறையில் திருவாரூர் (தி.6 ப. 27) திருத்தாண்டகமும் அமைந்துள்ளன.
|