திருவாரூரின் பழமையை உரைப்பதாக திருவாரூர் (தி.6 ப. 34)திருத்தாண்டகமும், நெஞ்சறிவுறுத்தலாக திருவாரூர் (தி.6 ப. 31), திருநெய்த்தானம் (தி.6 ப. 42) திருத்தாண்டகங்களும் அமைந்துள்ளன. நெய்த்தானன் என் நெஞ்சுளான் என்ற முடிபுடையதாக திருநெய்த்தானம் (தி.6 ப. 41) திருத்தாண்டகமும், அபயம் புக்கதை அறிவிப்பனவாக திருச்சோற்றுத்துறை (தி.6 ப. 44), திருவாவடுதுறை (தி.6 ப. 47)திருத்தாண்டகங்களும் அமைந்துள்ளன. கடவுளை எங்கே காணலாம் என்ற வினாவிற்கு விடை கூறுவதாகத் திருக்கன்றாப்பூர் (தி.6 ப. 61) திருத்தாண்டகம் அமைந்து உள்ளது. சிவபெருமானைச் சேராதார் தீநெறி சேர்வர் என்ற பொருளமைப்பில் திருவீழிமிழலை (தி.6 ப. 50) திருத்தாண்டகமும், நன்னெறிக்கண் சேராதவர் ஆவார் என்ற பொருளமைப்பில் திரு நாகேச்சுரம்(தி.6 ப. 66) திருத்தாண்டகமும் அமைந்துள்ளன. சிவன் என் சிந்தையான் என்ற பொருளமைப்பில் திருப்புத்தூர் (தி.6 ப. 76), திருமுண்டீச்சரம் (தி.6 ப.85) திருத்தாண்டகங்கள் அமைந்துள்ளன. வாய்மூர் இறைவனைக் கண்ட வண்ணம் உரைப்பதாக திருவாய்மூர்(தி.6 ப. 77) திருத்தாண்டகமும், இறைவன் எல்லாமாய் நிற்கும் இயல்புரைப்பதாக நின்ற தாண்டகமும் (தி.6 ப. 78) உள்ளன. இறைவனைக் கண்ட முறையை வினாவும் விடையுமாகக் கூறும்முறையில் திருவினாவிடை திருத்தாண்டகம் (தி.6 ப. 97) உள்ளது. திருவடி நீழலில் புகும் விருப்பைத் தெரிவிப்பதாக திருப்புகலூர் (தி.6 ப. 99) திருத்தாண்டகம் உள்ளது. "பேசாத நாளெல்லாம் பிறவா நாளே", "புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே", "ஏழையேன் நான் பண்டிகழ்ந்தவாறே", நீதனேன் என்னே நான் நினையாவாறே", "சிவனடியே சிந்திக்கப் பெற்றேன்நானே", "நான் அடியேன் நினைக்கப் பெற்றுய்ந்த வாறே" என்பன போன்ற பல மகுடங்களை உடைய திருப்பதிகங்களை அவர் அருளிய திருத்தாண்டகங்களில் காணலாம்.
|