உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முதல் பதிப்பின் முகவுரை நன்று மாதரம் நாவினுக் கரசடி நளினம்வைத் துயினல்லால் ஒன்றுமாவது கண்டில முபாயமற் றுள்ளன வேண்டோமால் என்று மாதியு மந்தமு மில்லதோரிகபரத் திடைப்பட்டுப் பொன்று வார்புகும் சூழலிற் புகேம்புகிற்பொறியிலைம் புலனோடே. | - தி.11 நம்பியாண்டார் நம்பிகள். |
திருமுறைகளுள் தேவாரத் திருமுறைகளே முதன்மை யானவை. அவற்றுள்ளும், ஞானசம்பந்தர் நாவுக்கரசர் திருமுறைகளே ஒப்ப உயர்ந்தவை. இதனைச் சேக்கிழார், அவ்விரு பேராசிரியரையுமே, 'சைவ சமயத்தின் இருகண்கள்' என அருளிச்செய்யும் முகத்தால் அருளினார். அவற்றுள் திருஞானசம்பந்தர் திருமுறை, உண்மைப் பொருள்களைக் கேட்பிக்கும் நிலையில் ஒரு சொல்லால் முடித்துக் கூறும் தொகைமொழியாயும், திருநாவுக்கரசர் திருமுறை, அவைகளைச் சிந்திப்பிக்கும் நிலையில் இனிது விளங்கத் தெரித்துக் கூறும் விரிமொழியாயும் அமைந்துள்ளன. அதுபற்றியே, சேக்கிழார், திருநாவுக்கரசரை, "அலகில் கலைத்துறை தழைப்ப அவதாரம் செய்தார்" என்று அருளினார். அதற்கேற்பத் திருநாவுக்கரசரது திருமுறைகளுள் எத்தனை விரிவான திருப்பதிகங்களைக் காண்கின்றோம்! 'சிவனெனும் ஓசை', 'இலிங்கபுராணம்', 'ஆதி புராணம்', 'நின்ற திருத்தாண்டகம்', 'பாவநாசத் திருப்பதிகம்', 'பாவநாசத் திருக்குறுந் தொகை', 'திரு அங்க மாலை', 'திருமறுமாற்றத் திருத்தாண்டகம்', 'திருவடித் திருத்தாண்டகம்', 'சித்தத் தொகை' முதலாக மற்றும் பலப்பல திருப்பதிகங்கள் ஒரு பொருளை எவ்வளவு தெளிவாக இனிது விளங்க விரித்துரைக்கின்றன! அதனால், பழம் பாடல்களாகிய வேதம், ஆகமம், உபநிடதம் என்பவற்றின் பொருள்கள் பலவும் நாவரசரது திருமுறைகளிலே இடம் பெற்றுத் திகழ்தல் காணப்படுகின்றது.
|