பக்கம் எண் :

45
 

நாவரசர் திருமுறை மூன்றனுள்ளும் திருத்தாண்டகத் திருமுறையே, நீண்ட அடிகளாலாகிய பெரிய பாடல்களால் இயன்றிருத்தலின், மேற்கூறிய எல்லாத் தன்மைகளையும் நிரம்பவுடையதாய் விளங்குகின்றது. திருத்தாண்டகம் ஏனைய ஆசிரியரது தேவாரத் திருமுறைகளில் இலாமையால், இத் திருமுறை தனிச் சிறப்புடைய தொரு திருமுறையாகும்.

சேக்கிழாரும், ஏனைய ஆசிரியன்மார் அருளிச்செய்யாத திருத்தாண்டகத்தை அருளிச் செய்த சிறப்புப் பற்றி நாவுக்கரசரை, 'தாண்டகச் சதுரர்' எனச் சிறப்பித்துப் போற்றினர். "காழித் தலைவராம் பிள்ளையாரும் தாண்டகச் சதுரராகும் அலர்புக ழரசும் கூட அங்கெழுந்தருள" என்பது அவ்வழகிய பகுதி. (தி.12 பெரிய புராணம் - குங்குலியக்கலயர் - 32.)

இங்ஙனமாகவே, இத்திருமுறை மேற்கூறியவாறு விரிந்த பொருள்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு இலங்குகின்றது.

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை அங்ஙனம் பல பெயர்களாலும் போற்றிப் பரவும் போற்றித் திருத்தாண்டகங்கள். அவனது திருவடியின் பெருமைகள் பலவற்றையும் தனித்தனிச் சிறு சிறு தொடர்களால் எடுத்தோதிப் புகழும் திருவடித் திருத்தாண்டகம், அவனது திருவுருவின் நிலையைவிளக்கும், 'தோன்றும்' என்னும் முடிபுடைய பல தொடர்களால் இயன்ற திருவுருத் திருத்தாண்டகம் ("வடியேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்"), மற்றும்,'தாமே, 'போலும்', 'கண்டாய்', 'காண்', 'நீயே' என்னும் முடிபுகளை யுடைய எண்ணற்ற தொடர்களால் இறைவனது இயல்புகளை யெல்லாம் வகுத்து வகுத்துக் கூறும் திருத்தாண்டகங்கள், அடையாளத் திருத்தாண்டகம், "பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே', "திருவீழி மிழலையானைச்சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே", "திருநாகேச் சரத்துளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே", "இறைவன் தன்னை ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே", "நீடுரானை நீதனேன் என்னேநான் நினையாவாறே', "ஆரூரில் அம்மான் தன்னை அறியா தடிநாயேன் அயர்த்தவாறே", "ஊன்கருவினுள் நின்ற சோதியானை உத்தமனைப் பத்தர்மனம் குடிகொண்டானைத் தீங்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே'. "புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே", "ஆவடு தண்டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே", "தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே", "தென்னெறும்பி யூர்மலைமேல்