பக்கம் எண் :

46
 

மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே","பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே", "கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே", "கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே", "கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே", "காளத்தி யான் அவன் என் கண்ணு ளானே", "ஏகம்பன் காண் அவன் என் எண்ணத் தானே", "வலிவலத்தான் காண் அவன் என் மனத்து ளானே", "திருப்புத்தூரில் திருத்தளியான் காண் அவன் என் சிந்தை யானே" என்றாற் போலும் முடிபுடைய திருத்தாண்டகங்கள், எத்துணைப் பரந்து பட்டுப் பலவாய உறுதிப் பொருள்களைப் பசுமரத் தாணிபோல நம் உள்ளத்திற் பதிவிக்கின்றன! இவையெல்லாம் இத்திருமுறைக்கே உரிய சிறப்பியல்புகளாகும்.

திருமுறைகள் பன்னிரண்டனையும் பல சிறந்த குறிப்புக்களுடன் முறையாக வெளிவரச் செய்து, அன்புடையார் பலரும் ஒருவாறான பொருளுணர்ச்சியுடன் அவற்றை ஓதி உய்யச் செய்தல் வேண்டும் என்று திருவுளங்கொண்டு, இது காறும் ஐந்து திருமுறைகளைத் தக்க புலவர்களைக் கொண்டுதக்க வகையில் செய்வித்தருளிய, திருத்தருமை ஆதீனம் 25 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், ஆறாந் திருமுறையாகிய இவ்வரிய பெரிய திருமுறைக்குக் குறிப்பெழுதும் தொண்டினை அடியேனுக்குப் பணித்தருளினார்கள்.

" ... மெய்

உருஞானத் திரள்மனம் உருகாநெக் கழுதுகண்

உழவாரப் படைகையி லுடையான்வைத் தனதமிழ்"

என (தி.11) நம்பியாண்டார் நம்பிகள் அருளியவாறு, நாவரசர், நாயகன் சேவடி தைவருஞ் சிந்தையும், நைந்துருகிப் பாய்வது போல் அன்பு நீர்பொழி கண்ணுமாய்ச் சிவாநுபூதியில் திளைத்து நின்று திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களின் திருக்குறிப்பைத் தேவர்தாமும் அறிதல் அரிதெனின், ஒன்றுக்கும் பற்றாத சிறியேன்கொல்லோ அதனைத் தெரிந்துணர வல்லேன்! எனினும்,

"உலகின் மாயப் பிறவி யைத்தரும்

உணர்வி லாவப் பெரும யக்கினை

ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல

உபரி பாகப் பொருள்ப ரப்பிய"