ஏனைய திருமுறைகளைப் போலவே இதனையும் சீரிய முறையில் அச்சிட்டு உதவிய ஞானசம்பந்தம் அச்சகத்தார்க்கும் எனது நன்றி உரியது. எல்லாவற்றையும், முன்னின்று இனிது முடித்தருளும் திருவருளை, இடையறாது எண்ணி இறைஞ்சுகின்றேன். தருமை ஆதீன முதற்குரவர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்தர் குருபூஜை விழாமலராகிய இவ் ஆறாந் திருமுறை, நான்கு ஐந்தாந் திருமுறைகளுடன், திருவாமூர் திருநாவுக்கரசர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தன்று, திருவதிகையில் ஸ்ரீ வீரட்டானேசுவரர் திருவடியிலும், திருவாமூரில் திருநாவுக்கரசர் திருவடியிலும் சாத்தி எடுக்கப் பெற்றது. ஏனைய திருமுறைகளும் இங்ஙனம் இனிது வெளிவரல் வேண்டும் என்பது, ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமகாசந்நிதானம் அவர்களது திருவுள்ளம். அஃது இனிது நிறைவெய்தத் திருவருள் முன்னிற்கும் வண்ணம் அனைவரும் வேண்டுவோமாக. வாழ்க திருமுறைகள்! வளர்க திருநெறி!
இங்ஙனம், ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி யவர்கள் அருளாணைப்படி, தருமைஆதீனம், 14 - 07 - 1963. | அடியேன் சி. அருணைவடிவேல் |
|