உ சிவமயம் திருச்சிற்றம்பலம் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருமுறைகளின் சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 1 அப்பர் தேவாரத்தில் இலக்கியப் பண்புகள் செஞ்சொற்கொண்டல், வித்துவான் சொ. சிங்காரவேலன் எம். ஏ., தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி முதல்வர். கலைநோக்கு: உலகின் அழகைக் கண்டு வியந்து போற்றும் இயல்பு நம்மிடம் இல்லை: துன்பங்களைக் கண்டு நொந்து கவலைப்படும் இயல்பே நம்மிடம் கால்கொண்டிருக்கின்றது. ஆனால் அழகு கூத்தாடும இயற்கைச் செல்வத்தை அறிந்து, உணர்ந்து பாராட்டிசைக்கும் பண்பு பாவலனிடத்தேயே உள்ளது. கவிஞன் உலகின் அழகுக் கூத்தைத் தன் சொற்களாற் காவியமாக்குகின்றான்; சொல்லோவியமாக்கி மகிழ்கின்றான். இதற்குக்காரணம் என்ன? கவிஞன் பெற்றிருக்கும் கவிதைக்கண் - கலைநோக்குத்தான் இதன் காரணமாகும். நம் பார்வை மேம்போக்காக நின்று விடுகின்றது; கவிஞன் அல்லது கலைஞன் பார்வை ஊடுருவிப் பாய்கின்றது. நம் நோக்கு புறத்தோற்றத்திலேயே நின்று வலியிழந்து விடுகின்றது; கவிஞன் அல்லது கலைஞன் நோக்கு அகத்தோற்றத்தில் ஆழ்ந்து அச்சிறப்பியல்புகளால் வலுப்பெற்றுவிடுகின்றது. இதனாலேயே பாட்டு, கவிஞனின் உயர்கருவியாகின்றது. மற்றவர்க்குப் பாட்டை நுகர இயலுகின்றதே தவிர புனையும்ஆற்றல்
|