பக்கம் எண் :

53
 

அருட்செல்வர்:

திருநாவுக்கரசு சுவாமிகள் சிறந்த தோத்திரப்பாக்களை அருளியஞானாசிரியர்; அவ்வருட்செல்வரை இத்தகு இலக்கியப் பண்புகள் கனிந்த பனுவல்களை - பக்தி உணர்ச்சிப் பாடல்களை யாத்த ஓர் அருட்புலவராகவும் காணலாம்; அவ்வருட் புலவருடைய பாக்களில் காணப்படும் இலக்கிய நலங்களைக்கண்டு, அத்தெய்வக் கவிஞரது பாக்களில் புலனாகும் அவருடைய திருவுள்ளத்தை அறிந்து, தெளிவுறுத்துவதே இச்சிற்றாராய்ச்சியின் நோக்கமாகும்.

பழுத்த அநுபவம் உடைய இப்பெரியார் பழுத்த தமிழ்ப்புலமை எய்தியிருந்த பண்பட்ட பாவலரும் ஆவர். ஆதலின் அவ்வாராய்ச்சி இவ்வருட் புலவருடைய இனிய திருவாக்குக்களை அடியாகக் கொண்டே இயங்குவதாகும்.

முருகியல் அமுதம்:

இலக்கியம் என்பது சொல், பொருள் ஆகிய அடிப்படையில் நயம் தோன்ற - கற்பனை விளங்க - உணர்த்தும் திறம் ஒளிர ஆசிரிய னுடைய அநுபவ வெளியீடாக இருப்பது.

ஆதலினாலேயே, ஆசிரிய னுடைய அநுபவ இன்பத்தை இலக்கியத்தில் நாமும் அநுபவித்தின்புற முடிகின்றது.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருட் புலவராக விளங்கிய நல்லாசிரியராதலின் அவருடைய கனிந்த உளத்தின் முருகியல் அமுதம் தமிழ்க் கவிதையாக வெளிவந்தது; அப்பெருமானாரின் கவிதைகள் கல்மனத்தையும் கசிந்துருக்கும் திறன் உடையவை; உறுதியான சொற்களால் இயன்றவை; பொருட்சிறப்பு பொதுளிய அமைப்பு உடையவை.

அப்பர் அருளுருவம்:

இறைவன் திருவடிகளிலேயே பதித்த நெஞ்சுடைய இப்பெருமானுடைய அருள் பழுத்த திருக்கோலத்தைச் சேக்கிழார் பின்வருமாறு சொல்லோவியமாக்கியுள்ளனர்;