"நாவலந் தீவகத்தினுக்கு நாதரான காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவமல்லோம் கடுமையொடு களவற்றோமே" "கோவாடிக் குற்றேவல்செய்கென்றாலும், குணமாகக் கொள்ளோம் எண்குணத்துளோமே" என்பன அவர் மறுமாற்றங்களாம். இவ்வெட்டுத் தலைப்புக்களும் பின் எட்டுப்பொதுப்பதிகத் தலைப்புக்களில் காணப்படுவனவாம். இப்பதினைந்து பதிகங்களேயன்றி, "கற்றவர்கள் உண்ணும்கனியே போற்றி (தி.6 ப.32) என்னும் திருவாரூர்த் திருத்தாண்டகம். திருக்கயிலாயத் திருத்தாண்டகப் பதிகங்களாகிய "வேற்றாகி விண்ணாகிநின்றாய் போற்றி" (தி.6 ப.55) என்ற பதிகம்; "பொறையுடைய பூமிநீரானாய் போற்றி" (தி.6 ப.56) என்ற பதிகம்; "பாட்டானநல்லதொடையாய் போற்றி" (தி.6 ப.57) என்ற பதிகம் என்பன போற்றித்திருத்தாண்டகம் என்ற தலைப்பில் அமைந்துள்ளன. ஆக 19 பதிகங்கள் சிறப்புத்தலைப்புடையனவாம். பிறந்த நாளும் பிறவாநாளும்: பயனில்லாத சொல் பேசுபவனை மகன் என்று சொல்லாதே. மக்களில் பதர் என்று சொல்லுக என்கிறார் திருவள்ளுவர். பயனில்சொல் பாராட்டுவானை மகன் எனல் மக்கட் பதடிஎனல் -குறள், 196 இது உலகியல். தலைவனும் தலைவியும் சேர்ந்து இன்புறும் நாளே பயனுள்ள நாள். அல்லாத நாள் பயன் இல்லா நாள். பதர் போன்ற நாள் என்கிறார், குறுந்தொகைப் புலவர் பதடி வைகலார். இவர் இயற்பெயர் தெரியாமையால்,பாடல் சிறப்பைக்கொண்டு இப்பெயரையே இவருக்கு இட்டனர் பெரியோர். இவர்தம் பாடற்பகுதி காண்க. "எல்லாம் எவனோ பதடி வைகல் ..................... அரிவை தோளணைத் துஞ்சி கழிந்த நாள் இவண் வாழுநாளே" -குறுந்தொகை 323 இது அகவியல். அருளியல் ஞானியாகிய அப்பரடிகளோ பேரின்பப் பொருளாகிய "பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே" (தி.6ப.1 பா.1-10); அவனைப் பற்றிப் பேசும் நாளே பிறந்த நாள்; பயனுள்ள நாள்;நாட்களிலே உள்ளீடு உள்ள நாள்; மற்ற நாள் பிறவா நாள்; உள்ளீடு இல்லாதபதர் போன்ற நாள், என்கிறார். "அரியானை அந்தணர் தம்சிந்தையானை" (தி.6 ப.1) எனத் தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "பெரும்பற்றப் புலியூரானைப் பேசாதநாளெல்லாம் பிறவாநாளே" (தி.6 ப.1 பா.1-10) என்பதையே மகுடமாக வைத்துப்பாடியுள்ளமை கண்டு தெளியத்தக்கது.
|