பக்கம் எண் :

100
 

மணவாளன், அழகன், அத்தன், அமுது, கரும்பு, கட்டி, சுடர் என்றெல்லாம் சிவபிரானைக் கூறிக்கூறி உருகுகின்றார் அடிகள்.

"மறவா துன்னைப் பாடப் பணியாயே"

(தி. 7 ப. 47 பா. 1)

"அடியார் கவலை களையாயே"

(தி. 7 ப. 47 பா. 2)

"இறைக் காட்டாயே எங்கட் குன்னை"

(தி. 7 ப. 47 பா. 3)

"அருகற் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே"

(தி. 7 ப. 47 பா. 4)

"அருத்தித் துன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே"

(தி. 7 ப. 47 பா. 8)

என்பன இதனுட் காணப்பெறும் வேண்டுகோள்கள். பொய்யான உடல்மீது கொண்டுள்ள பற்றை விட்டு, மெய்ப்பொருளாக இறைவனைப் பற்றிக் கொள்ளுதல் வேண்டும். அவரே உண்மையை உணர்ந்தோராவர். அடிகள் கருத்து இது.

"ஊனைக் காவல் கைவிட்டுன்னை உகப்பார் உணர்வாரே"

(தி. 7 ப. 47 பா. 7)

உள்ளம் தவறு செய்யும் போதெல்லாம், தன் பெருங்கருணைத் திறத்தாலே உள்ளத்தைத் திருத்திச் செப்பம் செய்து அதைத் தன் நெறிப்படுத்துவன் இறைவன்; சுந்தரர் வாழ்வில் இத்தகு நிகழ்ச்சிகள் பல இங்கு ஒப்பிடற்குரியன. தாம் செய்யும் துரிசுகளுக்கு உடனாய் என்று பாடும் அடிகளே இவ்வாறு பாடுகின்றார்:

"திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா"

(தி. 7 ப. 47 பா. 8)

தம்முடைய தமிழ்மாலையைப் பெருமிதத்துடன் பாடிப் பரவுவோர்க்குச் சிவனுலகு எய்தல் எளிது என்று முடிகின்றது இப்பதிகம். அதனுள் அடியர் வாயைத் 'திரு' என்ற அடைமொழி புணர்த்துக் கூறி, அதன் உயர்வை விளக்கியுள்ள ஆழம் உட்கொண்டு அறிதற்குரியது:

"செம்மாந் திருந்து திருவாய் திறப்பார் சிவலோகத் தாரே"

(தி. 7 ப. 47 பா. 10)