பக்கம் எண் :

101
 

சிவனுருவம்:

இனி, பரையின் வியாபகமும், திருவைந்தெழுத்துத் தியானமும் அடைந்து, திருக்கோயில் வழிபாட்டிலும் சிறந்து நிற்கும் உயிர் தன் அகக்கண்ணாலே சிவபிரான் திருவுருவை வழிபட்டு அவ்வின்பத்தில் திளைத்து நிற்கும் அநுபூதி நிலையே, சிவனுருவம் எனப்படும். 'பெரிய பெருமான் அடிகளைப்' பாடும் கடவூர்ப் பதிகம் (தி. 7 ப. 53) முதலியன இப் பொருளமைப்பினுள் அடங்கும். 'எல்லார்க்கும் இறை ஆவார்; இல்லை என்னாது அருள் செய்வார்; தாயும் தந்தையுமாய்ப் பல்லுயிர்க்கும் தாமேயாய தலைவனார்; உலகேழும் உடையர்; பேராயிரம் உடைய பிரான்; பீடைதீர அடியார்க்கு அருளும் பெருமான் அடிகள். இத்தகு பெருமான் மருவார் கொன்றை மதிசூடி மாணிக்கத்தின் மலைபோல விடைமேல் மாதோடு மகிழ்ந்து வரும் திருக்கோலம் காட்டுவர். தம் அடியார்க்குப் பிறவித் துன்பம் அறுத்துப் பாவம் கெடுக்கும் பரங்கருணைக் கடலாவர்' என்று இப் பதிகப் பொருளை உட்கோடல் வேண்டும்.

திருவடிப் பேறு:

இனி, அடுத்து நிற்பது திருவடி. சிவபிரானை வழிபடும் உயிர் சிவபிரான் திருவடிகளில் தலைப்பட்டுப் பேரின்பப் பெருவெள்ளத்தில் மூழ்கும்; நான் என்ற உணர்வழிந்து தான் என்ற நிலை எய்தும். இதுவே திருவடிப் பொருட்கண் அமைந்த திருமுறைக் கருத்து. 'மலமகற்றித் தான் ஆக்கி மலரடிக்கீழ் வைப்பன்' என்னும் மெய்கண்டார் திருவாக்குச் சிந்தித்தற்குரியது. 'உன் திருவடி அடைந்தேன்' (தி. 7 ப. 55 பா. 1) என்று புன்கூர் அரனைப் போற்றிசைக்கும் தக்சேசிப் பண்ணார் தமிழ்ப்பதிக முதலியன இவ்வமைப்பினுள் அடங்கும்.

திருவடி அடைந்து உய்ந்த மார்க்கண்டன், ஏயர்கோன், சண்டீசர், நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன், நாவினுக்கரையன் சூதன், சாக்கியன், சிலந்தி, கண்ணப்பன், கணம்புல்லன், பார்த்தன், பகீரதன், திரிபுராதிகள் முதலிய அனைவரையும் நினைவு கூர்கின்றார் அடிகள். 'அயர்ப்பொன்றின்றி நின் திருவடியதனை அர்ச்சித்தார் பெறும் ஆரருள்', 'நீ செய்த சீலம்', 'குற்றம் செயினும் குணமெனக் கருதும் கொள்கை' என்றெல்லாம் ஏத்துகின்றார். சைவசித்தாந்தத்தே பெரிதும் ஏத்தப் பெறும் திருவடிப்பேறு குறித்த அடிகள் திருவாக்குகள் அனைத்தும் ஒருங்குநோக்கி உணர்தற்குரியன.