பக்கம் எண் :

1014
 

69. வடதிருமுல்லைவாயில்

பதிக வரலாறு:

சுந்தரர், பெருமான் அருளால், சூளுறவு செய்து சங்கிலியாரை மணந்து திருவொற்றியூரின் எல்லையைக் கடந்ததால் கண்ணிழந்து செல்லும்பொழுது துயர் நீங்க, ''அழுக்கு மெய் கொடு'' என்ற திருப்பதிகம் பாடி, வழிப்போவார் வழிகாட்ட, வடதிருமுல்லைவாயில் சென்று இறைஞ்சிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 277)


குறிப்பு: இத்திருப்பதிகம் நுதலிய பொருள், இதன் வரலாற்றானே விளங்கும்.

பண்: தக்கேசி

பதிக எண்: 69

திருச்சிற்றம்பலம்

698.

திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்

சீருடைக் கழல்கள்என் றெண்ணி

ஒருவரை மதியா துறாமைகள் செய்தும்

ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்

முருகமர் சோலை சூழ்திரு முல்லை

வாயிலாய் வாயினால் உன்னைப்

பரவிடும் அடியேன் படுதுயர் களையாய

பாசுப தாபரஞ் சுடரே.

1



1. பொ-ரை: தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, வீட்டின்பமும், அதனைத் தருகின்ற மெய்ப்பொருளும், இம்மையிற்பெறும் செல்வமும் எல்லாம் எனக்கு உனது புகழையுடைய திருவடிகளே என்று மனத்தால் நினைத்து, பிறர் ஒருவரையும் துணையாக நினையாது, அவர்களைப் பற்றாமைக்கு ஏதுவாகிய செயல்களையே செய்தும், அவர்கள் என்னைப் பற்றவரின், பிணங்கியும் உன்னிடத்து உறைத்த பற்றுடையேனாய்த் திரிவேன்; வாயினாலும் உன்னையே பாடிப் பரவுகின்ற அடியேனாகிய யான் படுகின்ற துன்பத்தை, நீ நீக்கியருளாய்.