பக்கம் எண் :

1019
 
703.

மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்

வள்ளலே கள்ளமே பேசிக்

குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்

கொள்கையான் மிகைபல செய்தேன்

செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த

திருமுல்லை வாயிலாய் அடியேன்

பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய

பாசுப தாபரஞ் சுடரே.

6



6. பொ-ரை: மாற்றாது வழங்கும் வள்ளலே, வானத்தில் ஓடுகின்ற முப்புரங்களைப் பகைத்து எரித்தவனே, திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, யான் பொய்யையே பேசி, குற்றங்களையே செய்தாலும் அவைகளை நீ குணங்களாகவே கொள்ளும் அளவிற்கு உனது பேரருளைப் பெற்றேனாகலின், யான் பெற்ற பேறு, மற்று யார் பெற வல்லார்! அத்திருவருட் சார்பை நினைந்தே யான் குற்றங்கள் பலவற்றைச் செய்தேன்; அது, தவறுடைத்தே. ஆயினும், அது நோக்கி என்னை நீ கைவிடுவையாயின், அடியேன் வேறொரு துணை இல்லேன்; ஆதலின், அடியேனை அடைந்த துன்பத்தை நீ நீக்கியருளாய்.

கு-ரை: கள்ளம், 'உனக்கு ஆளல்லேன்' என்றதும், தவநெறி வேண்டிய பின்னும் பரவையாரை விரும்பியதும். குற்றம் செய்தது, 'பித்தன்' எனப் பலர்முன் இகழ்ந்தது, பொன் வேண்டுங்கால் ஏச்சுரைகளாகப் பாடியது போல்வன. இவைகளை இறைவன் குற்றமாகக் கொள்ளாது, மகிழ்வுற்றமை யறிக. 'மிகை பல' என்றது, மற்றொரு மாதரைத் தருமாறு வேண்டியது முதலாக, சூள் பிழைத்தமை ஈறாகச் சங்கிலியாரது திருமணத்தில் நிகழ்ந்தவை.

'எல்லாவற்றையும் பொறுத்த நீ, இச்சூள் பிழைத்தது ஒன்றனையும் பொறாதொழிந்தது, அது நின் அடியவட்கு இழைத்த பெருந்தீங்காதல் பற்றி என்பதனை யான் இப்பொழுது உணர்கின்றேன்' என்பார், ''மிகைபல செய்தேன்'' என்றும், 'இதுதான் பொறுக்கலாகாத குற்றமே எனினும், இது பற்றி எனக்கு நீ முன்செய்த திருவருளையெல்லாம் மறுத்துவிடுவையாயின், யான் கெட்டொழிவ தன்றி உய்யேன்' என்பார், ''அடியேன் பற்றிலேன் உற்றபடுதுயர் களையாய்' என்றும் அருளிச்செய்தார்.