707. | சொல்லரும் புகழான் தொண்டை மான் களிற்றைச் | | சூழ்கொடி முல்லையாற் கட்டிட் | | டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட் | | டருளிய இறைவனே என்றும் | | நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில | | நாதனே நரைவிடை ஏறீ | | பல்கலைப் பொருளே படுதுயர் களையாய் | | பாசுப தாபரஞ் சுடரே. | | 10 |
செல்வத்தையும் குறித்தன. இறைவனுக்குப் பொருட் செல்வமாவன, எல்லா உயிர்களும், எல்லா உலகங்களும் ஆகிய அடிமைகளும், உடைமைகளுமாம். 10. பொ-ரை: சொல்லுதற்கரிய புகழை யுடையவனாகிய, 'தொண்டைமான்' என்னும் அரசன், எல்லையில்லாத இன்பமாகிய பேரின்பத்தைப் பெறுமாறு அவனது யானையை, படர்ந்துகிடந்த முல்லைக் கொடியால் தடுத்து, பின்னர் அவனுக்கு வெளிப்பட்டருளிய இறைவனே, எந்நாளும் நல்லவர்கள் போற்றுகின்ற திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, வெள்ளை விடையை ஏறுபவனே, பல கலைகளின் பொருளாயும் உள்ளவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய். கு-ரை: இஃது இத்தலத்தில், இறைவன் வெளிப்பட்டருளிய வரலாற்றினை எடுத்தோதி யருளியது. அவ்வரலாறாவது, 'இத்தலம் உள்ள நாடாகிய தொண்டை நாட்டை ஆண்ட, 'தொண்டைமான்' என்னும் அரசன் வேட்டைக்குச் சென்றபோது அவனது யானையின் காலில் சுற்றிக்கொண்ட முல்லைக் கொடியை அவ் யானை அறுத்துச் செல்ல மாட்டாது நிற்க, அரசன் சினந்து அக்கொடியை, தனது வாளினால் வெட்டி விலக்கியபோது, உள்ளே சிவலிங்கம் இருத்தலைக் கண்டு மகிழ்ச்சியுற்று வணங்கி, திருக்கோயில் எடுத்தல் முதலிய திருப் பணிகளைச் செய்தான்' என்பது, இதனை இத்தல புராணத்துட் காண்க.
|